Last Updated : 23 May, 2025 07:13 AM

 

Published : 23 May 2025 07:13 AM
Last Updated : 23 May 2025 07:13 AM

ஆண்ட்ரூ பால்பிர்னி சதம் விளாசல்: மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது அயர்லாந்து அணி

டப்ளின்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அயர்லாந்து அணி.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.

தனது 9-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னி 138 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசினார். ஹாரி டெக்டர் 56, கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54, லார்கன் டக்கர் 30 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் மேத்யூ போர்டு 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

304 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 31 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை தாரை வார்த்தது. எவின் லீவிஸ் 2, கீசி கார்ட்டி 6, பிரண்டன் கிங் 19, அமிர் ஜாங்கு 0, கேப்டன் ஷாய் ஹோப் 2 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ராஸடன் சேஸ் 76 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் டாக்ரெல் பந்தில் போல்டானார்.

ஜஸ்டின் கீரிவ்ஸ் 35, மேத்யூ போர்டு 38, அல்சாரி ஜோசப் 0, குடகேஷ் மோதி 8 ரன்களில் வெளியேற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 34.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அயர்லாந்து அணி தரப்பில் பாரி மெக்கார்த்தி 4, ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x