Published : 22 May 2025 07:13 PM
Last Updated : 22 May 2025 07:13 PM
மும்பை: இங்கிலாந்தில் இந்திய யு-19 அணிக்கும் இங்கிலாந்து யு-19 அணிக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய யு-19 அணியில் இளம் அசத்தல் வீரர்களான வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுஷ் மாத்ரே மும்பைக்காக மிகப் பிரமாதமான முதல் தர கிரிக்கெட் அறிமுக போட்டியில் ஆட ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காகவும் கலக்கினார். இவர்தான் இங்கிலாந்து செல்லும் யு-19 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் - ஜூலை 2025ல் 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள், 2 இரண்டு மல்டி-டே போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய யு-19 அணிக்கு மும்பை விக்கெட் கீப்பர் அபிகியான் குந்து துணைக் கேப்டனாக இருப்பார். வைபவ் சூரியவன்ஷியுடன் தொடக்க வீரராக இறங்கிய பஞ்சாப் வீரர் விஹான் மல்ஹோத்ராவும் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சவுராஷ்ட்ராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஹர்வன்ஷ் பங்காலியா , வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யுதஜித் குஹா, கேரளாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் முகமது ஈனான், பஞ்சாபைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் அன்மோல்ஜீத் சிங் ஆகியோரும் யு-19 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா லெக் ஸ்பின்னர் முகமது ஈனான் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியவர். இதே தொடரில் அன்மோல்ஜித் சிங் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுராஷ்ட்ரா வீரர் ஹர்வன்ஷ் பங்காலியா 117 ரன்கள் என்று சதம் விளாசி தன் திறமையை வெளிப்படுத்தினார்.
கூச்-பெஹார் டிராபி என்னும் இளையோர் 4 நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட குஜராத் ஆல்ரவுண்டர் கிலான் படேலும் இந்த அணியில் உள்ளார். இவர் இடது கை ஸ்பின்னர் என்பதோடு பேட்டிங் திறமையும் கொண்டவர். இந்த அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவருமே வயது அடிப்படையில் 2026 யு-19 உலகக் கோப்பைக்குத் தகுதியுடையவர்கள்தான்.
2026-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து யு-19 உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
இந்திய யு-19 அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ் சிங் சவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குந்து, ஹர்வன்ஷ் பங்காலியா (விக்கெட் கீப்பர்), அம்ப்ரீஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது ஈனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT