Last Updated : 02 May, 2025 11:19 AM

 

Published : 02 May 2025 11:19 AM
Last Updated : 02 May 2025 11:19 AM

டிஆர்எஸ் முடிவால் சமூக வலைதளத்தில் எழுந்த சர்ச்சை | RR vs MI

சென்னை: ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் எல்பிடபிள்யூ ரிவ்யூ சார்ந்து டிவி அம்பயரின் முடிவு சமூக வலைதளத்தில் விவாதமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

இந்த ஆட்டத்தில் 100 ரன்களில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மும்பை பேட் செய்த போது 2-வது ஓவரை ராஜஸ்தான் வீரர் பசல்ஹக் ஃபரூக்கி வீசினார். அந்த ஆட்டத்தின் 5-வது பந்தை எதிர்கொண்ட ரோஹித், பந்தை மிஸ் செய்ய, பந்து அவரது காலில் பட்டது. உடனடியாக கள நடுவர் அவுட் கொடுத்தார்.

அதையடுத்து ரோஹித் அந்த முடிவை டிஆர்எஸ் முடிவுக்கு பரிந்துரை செய்தார். அப்போது பந்து லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆனது தெரிந்தது. அதன் காரணமாக கள நடுவர் தனது முடிவை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதுதான் சமூக வலைதளத்தில் விவாதமானது.

‘பந்து 50 சதவிதம் ஸ்டம்ப் லைனில் இருந்தது. அப்படி இருக்கும் சூழலில் மும்பை அணிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக நடுவர் முடிவை மாற்றினார்’ என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சில உதாரணங்களையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், குறித்த நேரத்தில் ரோஹித் ரிவ்யூ ஆப்ஷனை எடுத்தாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோஹித்தும், ரிக்கல்டனும். ரோஹித், 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியதன் மூலம் லீக் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு மும்பை முன்னேறி உளள்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x