Published : 02 May 2025 07:41 AM
Last Updated : 02 May 2025 07:41 AM
ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலாவது கடைசி லீக் ஆட்டம் வரை தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்முறை இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போது மூட்டைகட்டியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முடிவுரை எழுதியது பஞ்சாப் கிங்ஸ் அணிதான்.
ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி இதுபோன்ற நெருக்கடியான நிலையை சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக 18 சீசன்களில் சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 4-வது முறையாகும். 2020, 2022, 2024-ம் ஆண்டுகளிலும் அந்த அணி லீக் சுற்றை கடக்கவில்லை.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிக்கான தாகத்துடன் விளையாடாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இங்கு விளையாடி உள்ள 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்ததால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரே ஒரு நேர்மையான விஷயம் என்றால் அது சேம்கரணின் மட்டை வீச்சு மட்டுமே. அவரது அபாரமான பேட்டிங் காரணமாகவே சிஎஸ்கே 190 ரன்னை எட்ட முடிந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 220 ரன்கவரை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தது.
இவற்றை முதலில் நீர்த்துப்போவதற்கு தோனியே வழிவகுத்து கொடுத்தார். 18 ஓவர்களில் சிஎஸ்கே 177 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. ஆனால் அடுத்த ஓவரை வீசிய யுவேந்திர சாஹல் ஆட்டத்தை புரட்டிப் போட்டார். முதல் பந்து வைடாக வீசினார். இதற்கு மாற்று பந்தை மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசி தோனி சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால் அடுத்த பந்தை சாஹல் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீச தோனி அதை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் கேட்ச் ஆனது.
இங்குதான் தோனி தவறு செய்தார். எப்போது பேட்டிங்கில் சரியான கணக்கீடு செய்து விளையாடும் தோனி, சுழற்பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பவர் கிடையாது. முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அடுத்த பந்தில் நிதானம் காட்டி, சுழற்பந்து வீச்சில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் கொண்ட ஷிவம் துபேவுக்கு ஸ்டிரைக்கை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அதை தோனி செய்யத் தவறியதால் அந்த ஓவரில் யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்களை கைப்பற்றி சிஎஸ்கேவின் ரன் வேட்டையை முடக்கினார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷிவம் துபே, நெருக்கடி காரணமாக தவறான ஷாட் விளையாடி அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க சிஎஸ்கே அணி 190 ரன்களுக்குள் முடங்கியது.
கடைசி 7 பந்துகளில் 5 விக்கெட்களை தாரைவார்த்தது சிஎஸ்கே அணி. விக்கெட்கள் வீழ்ந்த இந்த 5 பந்துகளும், 19.2 ஓவர்களிலேயே ஆட்டமிழந்ததால் அதில் எஞ்சிய 4 பந்துகளும் என முழுமையாக 9 பந்துகளை சிஎஸ்கே கோட்டைவிட்டது. ஒருவேளை தோனி ஆட்டமிழக்காமல் இருந்து இந்த 9 பந்துகளையும் சிஎஸ்கே விளையாடி இருந்தால் நிச்சயம் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை சேர்த்திருக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
191 ரன்கள் சிறப்பான இலக்குதான். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அதை எந்தவித சிரமும் இன்றி ஸ்ரேயஸ் ஐயர் (72), பிரப்சிம்ரன் சிங் (54)
ஆகியோரது தாக்குதல் ஆட்டத்தால் எளிதாக அடைந்தது. பஞ்சாப் அணி ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் சீராக எடுத்தது. வழக்கம் போன்று எந்தவித தாக்கமும் இல்லாத சிஎஸ்கேவின் பந்துவீச்சும், தீவிரம் இல்லாத பீல்டிங்கும் பஞ்சாப் அணியின் துரத்தலை எளிதாக்கியது. ரவீந்திர ஜடேஜா வீசிய 8-வது ஓவரின் 2-வது பந்தை ஸ்ரேயஸ் ஐயர் ஸ்வீப் ஷாட்டில் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையை நோக்கி தூக்கி அடித்தார். அந்த பகுதியில் ஷிவம் துபே பீல்டிங் செய்த நிலையில் மிக நெருக்கமாக எல்லைக்கோட்டு பகுதியை நோக்கி பாய்ந்த பந்தை ஷிவம் துபே கேட்ச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் பிரப்சிம்ரன் கொடுத்த எளிதான கேட்ச்சை பதிரனா தவறவிட்டார். எனினும் அதன் பின்னர் பிரப்சிம்ரன் அதிகம் நேரம் களத்தில் நிற்கவில்லை.
இதன் பின்னர் களமிறங்கிய ஷசாங் சிங்கும் தாக்குல் ஆட்டம் மேற்கொண்டார். கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மதீஷா பதிரனா வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசி ஸ்ரேயஸ் ஐயர் மிரட்டினார். பதிரனாவின் வேகத்தை சரியாக பயன்படுத்தி ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய 2 சிக்ஸர்கள் அனைவரையும் கவர்ந்தது.
இந்த ஓவரில் பதிரனா தாரைவார்த்த 17 ரன்கள் பஞ்சாப் அணியின் வெற்றியை எளிதாக்கியது. ஏனெனில் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்களே தேவை என்ற நிலை உருவானது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ஷசாங் சிங் 3-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்த போது எல்லைக்கோட்டில் டெவால்ட் பிரேவிஸ் சாகசத்துடன் கேட்ச் செய்தார். 19-வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயரை, பதிரனா போல்டாக்கினார். ஆனால் ஆட்டம் அப்போது சிஎஸ்கேவின் கைகளில் இல்லை. சிஎஸ்கேவின் சுழலுக்கு எதிராக 7 ஓவர்களில் பஞ்சாப் அணி 71 ரன்களை குவித்து மிரட்டியது.
சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் 8-வது தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. சிஎஸ்கேவுக்கு இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் அணியில் மற்ற உள்ள இளம் வீரர்களின் திறமையைப் பரிசோதித்துக் கொள்ளலாம். மேலும் கவுரவமான வெற்றிகளுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சிக்கலாம். சிஎஸ்கே இதற்கு முன்னர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய 3 முறையும் போராட்ட குணம் இருந்தது. ஆனால் இம்முறை அதை அரிதாககூட பார்க்க முடியவில்லை. வெற்றிக்கான வேட்கையோ, தாகமும் இல்லாமல் போனது. இங்கிருந்து அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைப்பதிலும் சிஎஸ்கே அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்பது நிதர்சனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT