Published : 02 May 2025 07:06 AM
Last Updated : 02 May 2025 07:06 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 209 ரன்களை குவித்த போதிலும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் குஜராத் அணி தோல்வி அடைய நேரிட்டது.
இந்த தோல்வியில் இருந்து குஜராத் அணி மீண்டுவர முயற்சிக்கக்கூடும். நடப்பு சீசனில் அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய போட்டி உட்பட குஜராத் அணிக்கு 5 ஆட்டங்கள் மீதம் உள்ளது. இதில் 2-ல் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் 5 அரை சதங்களுடன் 456 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 406 ரன்கள் எடுத்துள்ள ஜாஸ் பட்லர், 389 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை தாரைவார்த்திருந்தனர். இவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். முகது சிராஜ், ரஷித் கான் ஆகியோரும் ஆதரவு அளிக்கக்கூடும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக இஷான் கிஷன், கமிந்து மெண்டிஸ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். ஹென்ரிச் கிளாசன், அனிகேத் வர்மா, நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிரிக்கக்கூடும். பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷால் படேல், பாட் கம்மின்ஸ் குஜராத் பேட்ஸ்மேன்ளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நடப்பு சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோற்கடித்து இருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT