Published : 02 May 2025 06:55 AM
Last Updated : 02 May 2025 06:55 AM

‘இலக்கை துரத்துவதையே விரும்புகிறேன்’ - சொல்கிறார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

ஸ்ரேயஸ் ஐயர்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 191 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் பிரப்சிம்ரன் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பஞ்சாப் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் 10 ஆட்டங்களில் 8-வது தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும் கேப்டனுமான ஸ்ரேயஸ் ஐயர் சொந்த மைதானமான முலான்பூரில் 4 ஆட்டங்களில் விளையாடி முறையே 0, 9, 0, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் வெளிமைதானங்களில் முறையே 97* (குஜராத்), 52* (லக்னோ), 82 (ஹைதராபாத்), 7 (ஆர்சிபி), 25* (கொல்கத்தா), 72 (சிஎஸ்கே) ரன்களை வேட்டையாடி உள்ளார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: எந்த ஆடுகளமாக இருந்தாலும் இலக்கை துரத்துவதை விரும்புகிறேன், இலக்கு பெரிதாக இருக்கும் போது நான் சிறப்பாக செயல்படுதாக உணர்கிறேன். என்னை பொறுத்தவரையில் பொறுப்புடன் செயல்பட்டு அடுத்த பேட்ஸ்மேன்களுக்கான உத்வேகத்தை உருவாக்க வேண்டும். என் உள்ளுணர்வின்படி எனது வழியில் விளையாட முயற்சி செய்கிறேன். வெளியூர் மைதானங்களில் மட்டும் சிறப்பாக விளையாடுவதாக கூறுகிறார்கள்.

இந்த நேரத்தில் அதைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை நான் விரும்பவில்லை. முடிந்தவரை அனுபவித்து விளையாடுகிறேன். நிகழ்காலத்தில் இருக்க முயற்சிக்கிறேன், பந்துக்கு எதிர்வினையாற்றுகிறேன். பெரிய அளவிலான இலக்கு என்பதை அறிந்தவுடன் சொந்த மைதானமோ அல்லது வெளிமைதானமோ என்பது முக்கியமல்ல, நான் ஒரே மாதிரியான அணுகுமுறையையே வைத்திருக்கிறேன், சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் அது வேலை செய்வது இல்லை.

நான் களத்தில் இருந்தால், எந்த இலக்கையும் துரத்த முடியும் என்று எனக்குத் தெரியும். சமீபகாலமாக நான் வலைப்பயிற்சியில் நிறைய பேட்டிங் செய்து வருகிறேன், புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறேன், பந்து சறுக்கியபடி சிறந்த வேகத்தில் வரும் என்று எனக்குத் தெரியும். வலை பயிற்சியில் மேற்கொண்ட பயிற்சிகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. நான் உண்மையிலேயே உழைத்த ஒரு பகுதி இது. நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் என் மனப்பான்மை எப்போதும் உயர்ந்ததாக இருக்கும்.

பேட்டிங்கை விட பீல்டிங் மிகவும் சவாலாக இருந்தது, ஏனெனில் நான் லாங்-ஆனில் இருந்து ஓடிக்கொண்டிருந்தேன். ஏனெனில் ஓவர் ரேட்டை விகிதத்தையும் நாங்கள் பராமரிக்க வேண்டியிருந்தது. இதனால் விரைவாக சிந்திக்க வேண்டியிருந்தது. ரிக்கி பாண்டிங்குடன் ஆலோசித்த போது

கடைசி தருணம் வரை காத்திருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்; குறிப்பாக பதிரனா, கலீல் அகமது போன்ற விதிவிலக்கான இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய வீர்ர்கள் கணிசமான அனுபவத்தைக் கொண்டிருப்பதால் நாங்கள் எங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதும், அடிப்படையில் எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பதுமே எங்களுடைய யுக்த்தியின் நோக்கமாக இருந்தது.

பேட்டிங்கில் நான் உள்ளே வந்ததும், சில பந்துகளை விளையாடி ஆடுகளம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்க விரும்பினேன். 10 பந்துகளை எதிர்கொண்ட பின்னரே பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்தேன். பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுக்கின்றனர். தங்களது அணுகுமுறையில் அற்புதமாக உள்ளனர். அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக விளையாடுவத இல்லை என்று அர்த்தமல்ல. இருவரும் தங்களது உத்வேகத்தை தொடர்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x