Published : 27 Apr 2025 09:42 AM
Last Updated : 27 Apr 2025 09:42 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவுக்கு இது 9-வது ஆட்டத்தில் 7-வது தோல்வியாக அமைந்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் மங்கி உள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: இந்த சீசனில் நாங்கள் வெளிப்படுத்திய திறனால் ஏலத்தில் முழுமையாக சரியானவற்றை பெற்றோம் என்பது சொல்வது கடினம். மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன, அதுதான் ஏலத்தின் புள்ளி. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ஏலம் என்பது முழுமையான அறிவியல் இல்லை.
ஏலம் மிருகம் போன்ற பாய்ச்சல் கொண்டது. 25 மணி நேரத்துக்குள் வீரர்களை வாங்குகிறோம். அதன் முடிவில் மனரீதியாகவும், சில நேரங்களில் உடல் ரீதியாகவும் சோர்வடைவதை பார்க்க முடியும். எனினும் எங்களுக்கு ஒரு நல்ல அணி கிடைத்துள்ளது என்றே நான் இன்னும் நினைக்கிறேன். சிறந்த அணியாக மாறுவதற்கு நாங்கள் வெகு தொலைவில் இல்லை.
எங்களது விளையாட்டு பாணியை பற்றியும் விரிவாக ஆலோசித்து வருகிறோம். மேலும் டி 20 கிரிக்கெட் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் வேறு வழியில் பயணிக்க அதிக நேரம் ஆகாது.
ஓரிரு வீரர்களின் காயங்கள் மற்றும் ஃபார்மில் இல்லாத வீரர்களால் போட்டிக்கான திட்டத்தை உருவாக்க நாங்கள் மிகவும் போராடினோம். அதிகளவிலான மாற்றங்களை மேற்கொண்டோம். ஒருவேளை நாங்கள் இல்லாத ஒன்றை தேட முயற்சித்திருக்கலாம்.
துரதிருஷ்டவசமாக ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்திய செய்ய முடியவில்லை. எஞ்சிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT