Published : 26 Apr 2025 08:38 PM
Last Updated : 26 Apr 2025 08:38 PM
கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் ஏதோ விடுமுறையைக் கழிக்க இங்கு வந்துள்ளது போலவே ஆடுகின்றனர் என்று விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேக்ஸ்வெல் படுமோசமாக ஆடி வருவதால் அவரது ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கே அவரை உட்கார வைக்க வேண்டியதாயிற்று. வெறும் 41 ரன்களை 5 போட்டிகளில் எடுத்துள்ளார் மேக்ஸ்வெல். கடந்த ஐபிஎல் சீசனிலும் ஆர்சிபி அணிக்காக ஆடி சொதப்பலோ சொதப்பல் என்று கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் விரேந்திர சேவாக், இந்த முறை கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்றோர் இங்கு விடுமுறையைக் கழிக்க வருகின்றனர் என்று சாடியுள்ளார்.
“அவர்கள் இந்தியாவுக்கு விடுமுறையைக் கழிக்கவே வருகின்றனர். தங்கள் அணியை அவர்கள் நேசிப்பது போல் தெரியவில்லை. அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டுமென்ற உணர்வே அவர்களுக்கு இருப்பதில்லை. இன்னும் அவர்கள் ஆடும் அணி கோப்பையை வென்றதில்லை. இந்த முறையாவது கோப்பையை வெல்ல இவர்கள் ஆடி உதவ வேண்டும். நான் நிறைய வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன். அவர்களில் ஓரிருவருக்கேனும் நன்றாக ஆட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆவல் இருக்கும். மற்ற அயல்நாட்டு வீரர்கள் வாய் கிழிய பேசுவார்கள். ஆனால் களத்தில் சொதப்பி விடுவார்கள்” என்று சேவாக் ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார்.
கிளென் மேக்ஸ்வெல், தன் ‘ஷோமேன்’ என்ற புத்தகத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னரே சேவாகுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட உரசலைக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் அணியின் ஹை பெர்பாமன்ஸ் குழுவில் சேவாக் இருந்த போது செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் மேக்ஸ்வெலை சாடி ‘பெரிய ஏமாற்றம்’ என்று வர்ணித்தார்.
நாங்கள் நல்லுணர்வுடன் பிரிந்தோம் என்று நினைக்கும் போது சேவாக் இப்படிக் கூறினார் என்று மேக்ஸ்வெல் பதிவு செய்துள்ளார். மேலும், சேவாகிற்கு அனுப்பிய மெசேஜில், மேக்ஸ்வெல், ‘இப்படி கூறியதன் மூலம் உங்கள் ரசிகர் ஒருவரை நீங்கள் இழந்து விட்டீர்கள்’ என்று வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆனால், சேவாக் தன் பதிலில், “உன்னைப் போன்ற ரசிகர் தேவையில்லை” என்று முகத்திலடித்தாற் போல் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் கிளென் மேக்ஸ்வெலை நோக்கி தன் விமர்சனத்தை வைத்துள்ளார் சேவாக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT