Published : 26 Apr 2025 12:56 PM
Last Updated : 26 Apr 2025 12:56 PM
ஒரு வெற்றிகரமான ரஞ்சி டிராபி சீசனை விட ஒரு சுமாரான ஐபிஎல் சீசனே வீரர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது என்று கூறும் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் மீடியா கவரேஜ், ரஞ்சி டிராபிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை, சம்பளங்களிலும் பெரும் இடைவெளியும் சமத்துவமின்மையும் உள்ளது என்று சாடியுள்ளார்.
ஐபிஎல் மூலம் நல்ல வீரர்கள் இந்திய கிரிக்கெடுக்குக் கிடைத்து வருவதை வரவேற்கும் கவாஸ்கர், ரஞ்சி டிராபி இதனால் பெறும் மிக மிகக் குறைவான கவன ஈர்ப்பினால் உள்ளூரிலிருந்து ஒரு வீரர் வருவது மிக மிகக் கடினமாகியுள்ளது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து ஸ்போர்ட் ஸ்டார்’ இதழுக்கு எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் பகிர்ந்தவை: ‘நடப்பு ஐபிஎல் மீண்டும் காட்டுவது என்னவெனில் ஒரு நல்ல ஆட்டம் ஆடிவிட்டால் போதும், உடனே அவரை உயர்ந்த கவுரவங்களுக்கு உரியவராக உயர்த்துகின்றனர். ஆனால், தேசிய சாம்பியன்ஷிப் ஆன ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் ஆடினால் அந்த ஆட்டத்துக்கோ, வீரருக்கோ போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. ரஞ்சியில் ஒருவர் செய்யும் ஆகச் சிறந்த சாதனை கூட ஊடகத் தலைப்புச் செய்தியாக மாறுவதில்லை.
ஆனால், இந்த ஒரு மேட்ச் தீரர்கள் காணாமல் போய்விடும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு ரஞ்சி சீசன் முழுதும் பிரமாதமாக ஆடினாலும் இந்த ஐபிஎல் ஒரு போட்டி ஆட்டச் சலசலப்பு ஏற்படுத்தும் கீர்த்தி, ரஞ்சி பிளேயர்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், ஐபிஎல் தொடருக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, மீடியா கூட்டாளிகளாக அதிக முக்கியத்துவம் கொடுப்பது, பெரிய ஸ்பான்சர்ஷிப் உரிமைகள் ஆகியவையே.
இதில் வெந்த புண்ணில் உப்பைத் தடவுவது போல் ரஞ்சி, சையத் முஷ்டக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி என்று ஒரு வீரர் கன்னாபின்னாவென்று முழு தொடரிலும் ஆடி சரியான பெர்பாமென்சைக் கொடுத்தாலும் ஐபிஎல் ஏலத்தில் அன் கேப்டு வீரர்களுக்கான குறைந்தப்பட்சத் தொகையான ரூ.30 லட்சத்திற்குக் கூட விலை போவதில்லை.
ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கம், ரஞ்சி டிராபி வீரர்களுக்கும் ஐபிஎல் வீரர்களுக்குமான சம்பள இடைவெளியைக் குறைக்க முயற்சிகள் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதே பாணியை பிசிசிஐ-யின் மற்ற சங்கங்களும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT