Published : 26 Apr 2025 12:03 PM
Last Updated : 26 Apr 2025 12:03 PM
சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோல்வி அடைந்து ஒரு புதிய எதிர்மறைச் சாதனையை நிகழ்த்தியுள்ளது .
சேப்பாக்கத்தில் படுமட்டமான குழிப்பிட்ச்களைப் போட்டு ஸ்பின் பவுலிங்கை வைத்து எதிரணிகளை மிரட்டி வந்த சிஎஸ்கே, இந்த முறை பிட்ச் இவர்களுக்கு ஏற்றபடி அமையாததால் ‘முதல் தோல்வி’ என்று சில தோல்விகளைத் தவிர்க்க முடியாமல் சந்தித்து வருகிறது.
பேட்டிங் பிட்சில் சிஎஸ்கே நேற்று 154 ரன்களைத்தான் அடிக்க முடிந்தது. இதனை சன் ரைசர்ஸ் 8 பந்துகளே மீதம் வைத்து வெற்றி பெற்றது. டெவன் கான்வே ஃபார்மில் இல்லை என்று உட்கார வைக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர்களின் ‘மூத்த’ விக்கெட் கீப்பர் பேட்டர் என்ன பெரிய ஃபார்மில் இருக்கிறார் என்ற கேள்வியை ஒருவரும் எழுப்புவதில்லை.
சிஎஸ்கே கடினமாக ஆடி அதிகப் போட்டிகளை வென்றதில்லை. அப்படி கடினமான ஃபைட் கொடுக்கும் போட்டியிலெல்லாம் தோல்வியையே தழுவி உள்ளனர். கடினமான சவால்கள் நிரம்பிய போட்டிகளை அதிகம் எதிர்கொண்டிருந்தால் இப்போதைய கடினமான காலத்தை எதிர்கொண்டிருக்கலாம்.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா தன் யூடியூப் சேனலில் கூறியது: “சென்னை மேலும் ஒரு போட்டியை இழந்துள்ளது. அவர்கள் மேலுமொரு வரலாற்றைப் படைத்துள்ளனர். ஆனால் இதை நினைத்து அவர்கள் பெருமைப்பட ஒன்றுமில்லை. 2008-க்குப் பிறகு ஆர்சிபி முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2010-க்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினர். நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
இதோடு சேப்பாக்கம் என்னும் சொந்த மண்ணில் சிஎஸ்கே 4 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி கண்டுள்ளது. அவர்களால் இனி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியுமா? இதற்கு ஒரே பதில், அவர்களால் தகுதி பெற முடியவே முடியாது என்பதே. கணக்குப் போட்டுச் சொல்லலாம் சிஎஸ்கே இதைச் செய்தால் தகுதி பெறலாம், அதைச் செய்தால் தகுதி பெறலாம் என்று. ஆனால் யதார்த்தத்தில் அவர்களால் தகுதி பெற முடியாத என்ற நிலைதான் உள்ளது.
16 புள்ளிகள் என்பதை மறந்து விடுவோம். அவர்களால் 14 புள்ளிகளையே எட்ட முடியாது. ஏனெனில் மிக மிகச் சாதாரணமான கிரிக்கெட்டை அவர்கள் ஆடி வருகின்றனர். 2019-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் ஆல் அவுட் ஆகியுள்ளனர். மிகவும் தாழ்ச்சி நிலையில் உள்ளனர்.
அவர்களுக்குத் தவறாக போனது என்னவெனில் ஏலத்தில் தவறிழைத்தனர். அனுபவசாலிகள் என்று கருதி திரிபாட்டி, தீபக் ஹூடா, விஜய் சங்கரை நம்பியது பெரும் தவறு. ரவீந்திர ஜடேஜாவை நம்பினர். அவரும் அரைசதம் எடுத்தார். ஆனால், இந்த சீசன் முழுவதுமே அவர் 2 சிக்சர்களையும் 2 நான்குகளையும் மட்டுமே அடித்துள்ளார். இவரைப் போய் ஸ்பின்னை அடித்து ஆட 4-ம் நிலையில் இறக்குகிறார்கள். அவரால் ரன்கள் எடுக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர் எப்போது ரன் எடுத்தாலும் மெதுவாகவே ரன்களை எடுக்கிறார். இதனால் அணிக்கு ஒருவித பயனும் ஏற்படுவதில்லை. ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே இருவரையும் நீக்கி விட்டீர்கள்” என்று சாடிய ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே பந்துவீச்சிலும் கட்டுப்பாடின்றி வீசுகிறது என்று சாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT