Published : 26 Apr 2025 06:19 AM
Last Updated : 26 Apr 2025 06:19 AM

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பஞ்சாப் அணி அந்த ஆட்டத்தில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் திடீரென பார்மை இழந்துள்ளது அணியின் செயல் திறனை பாதித்துள்ளது.

கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் ஸ்ரேயஸ் ஐயர் முறையே 6, 7, 0 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இன்றைய ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுவதால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

தற்போது அந்த அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மைதானத்தில் எதிரணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்க உள்ளார். இதனால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். நடப்பு சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் 3 அரை சதங்களுடன் 263 ரன்கள் சேர்த்துள்ளார்.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸுடன் கொல்கத்தா அணி 2-வது முறையாக மோதுகிறது. கடந்த 15-ம் தேதி முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் 112 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்து இருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

நடப்பு சீசனில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் நிலைத்தன்மையுடன் இல்லாதது பலவீனமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் குயிண்டன் டி காக்கிற்கு பதிலாக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸும் ஏமாற்றம் அளித்தார். 3-வது வீரராக களமிறங்கும் அஜிங்க்ய ரஹானே நிலைத்து நின்று விளையாடும் நிலையில் ஆட்டத்தின் போக்கை அவரால் பெரிய அளவில் மாற்ற முடியாமல் உள்ளது.

மிடில் ஆர்டரில் ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இதேபோன்று ரகுவன்ஷியிடம் இருந்தும் தொடர்ச்சியான செயல் திறன் இல்லை.

பந்துவீச்சு துறையில் கடந்த காலங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் நடப்பு தொடரில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தடுமாறி வருகின்றனர். இந்த சீசனில் ஈடன் கார்டன் மைதானத்தில் சுனில் நரேன் 2 விக்கெட்களையும், வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்களையும் மட்டுமே கைப்பற்றி உள்ளனர். அதேவளையில் 2 ஆட்டங்களில் விளையாடிய மொயின் அலி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

அணியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு பதிலாக ரோவ்மன் பொவல் களமிறக்கப்படக்கூடும். வலுவான ஹிட்டரான அவர், பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர். ஹாட்ரிக் தோல்வியை சந்திப்பதை தடுக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

முலான்பூர் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையை முடக்கிய யுவேந்திர சாஹல் மீண்டும் ஒரு முறை சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இதேபோன்று 11 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டரான மார்கோ யான்சன் ஆகியோரும் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

‘ஈடனில் தடுமாற்றம்‘ - ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொந்த மண்ணில் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் 5-ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சிக்கலின்றி அடைய முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x