Last Updated : 25 Apr, 2025 07:48 AM

 

Published : 25 Apr 2025 07:48 AM
Last Updated : 25 Apr 2025 07:48 AM

வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி (-1.361) 9-வது இடத்திலும், சிஎஸ்கே (-1.392) 10-வது இடத்திலும் உள்ளன. இதனால் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி கண்டிருந்தன.

சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. மந்தமான ஆடுகளத்துக்கு தகுந்தபடி சிஎஸ்கே அணி தகவமைத்துக் கொண்டு விளையாட முடியாதது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

முதல் ஆட்டத்தில் மட்டுமே மும்பையை வீழ்த்திய நிலையில் அதன் பின்னர் ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்து. இதில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியால் 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் முதல்முறையாக குறைந்த ரன்களை சேர்த்து மோசமான சாதனையை படைத்திருந்தது.

இந்த ஹாட்ரிக் தோல்விகளுக்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகி பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள தோனி அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். பந்து வீச்சில் அன்ஷுல் கம்போஜ் பேட்டிங்கில் ஷேக் ரஷித், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதில் பேட்டிங்கில் ஷேக் ரஷித், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் நம்பிக்கை அளித்துள்ளனர். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷேக் ரஷித் 19 பந்துகளில் 27 ரன்களையும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமான ஆயுஷ் மகத்ரே 15 பந்துகளில் 32 ரன்களும் விளாசி கவனம் ஈர்த்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக தென் ஆப்பிரிக்க அதிரடி வீரரான 22 வயதான டெவால்ட் பிரேவிஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் 286 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது. மேலும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை 9 பந்துகள் மீதம் வைத்து வெற்றிகரமாக துரத்தியிருந்தது. இந்த 2 ஆட்டங்களை தவிர்த்து மற்ற 6 ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணி தனது அதிரடி பாணி அணுகுமுறையை விடாப்பிடியாக கைப்பற்றிக் கொண்டு தோல்வியையே சந்தித்தது.

ஆட்டத்தின் சூழ்நிலையையும், ஆடுகளத்தின் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் எல்லா நேரத்திலும் தாக்குதல் ஆட்டம் தொடுப்பது ஹைதராபாத் அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடியால் இந்த சீசனில் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. இதில் அபிஷேக் சர்மா, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய அளவிலான இலக்கை சர்வ சாதாரணமாக கடக்க உதவியிருந்தார்.

ஆனால் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து வெற்றிக்கான பங்களிப்பு இதுவரை பெரிய அளவில் வெளிப்படவில்லை. நடுவரிசை பேட்ஸ்மேன்களில் ஹென்ரிச் கிளாசனை தவிர்த்து மற்ற வீரர்கள் அழுத்தத்தின் கீழ் சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் தேக்கம் அடைகின்றனர். இஷான் கிஷன் தொடக்க ஆட்டத்தில் சதம் அடித்தார். ஆனால் அதன் பின்னர் 7 ஆட்டங்களில் அவர் முறையே 0, 2, 2, 17, 9, 2, 1 ரன்களில் நடையை கட்டினார்.

இதேபோன்று நித்திஷ் குமார் ரெட்டியிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படவில்லை. அவர், 8 ஆட்டங்களில் 133 ரன்களே சேர்த்துள்ளார். டாப் ஆர்டர், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்பட்டால் மட்டுமே ஹைதராபாத் அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். இதேபோன்று பந்து வீச்சிலும் அந்த அணி முன்னேற்றம் காணவேண்டியது அவசியம்.

‘இதுவரை வென்றதில்லை’ - ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சிஎஸ்கே அணியை, ஹைதராபாத் அணி வென்றது இல்லை. அந்த அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடி இருந்தன. இதில் சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x