Published : 24 Apr 2025 04:52 AM
Last Updated : 24 Apr 2025 04:52 AM
லக்னோ: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார்.
டெல்லி, லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. எய்டன் மார்கிரம் 52, மிட்செல் மார்ஷ் 45, ஆயுஷ் பதோனி 36, டேவிட் மில்லர் 14, நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2 ரன்கள் எடுத்தனர்.
டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், சமீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அபிஷேக் போரல் 51, கருண் நாயர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கே.எல். ராகுல் 57, அக்சர் படேல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டெல்லி அணியின் முகேஷ் குமார் தேர்வானார்.
இதன்மூலம் டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மாறாக லக்னோ அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
இந்த ஆட்டத்தில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். அதனால்தான் தோல்வி கண்டோம். முதல் 10 ஓவர் வரை எங்களது ரன்ரேட் அபாரமாக இருந்தது. ஆனால் நடு ஓவர்களில் டெல்லி அணியினர் சிறப்பாக பந்துவீசி எங்களைக் கட்டுப்படுத்தி விட்டனர்.
இந்தப் போட்டியில் டாஸ் மிகவும் முக்கிய பங்கு வகித்தது. லக்னோ ஆடுகளமானது, எப்போதுமே 2-வதாக களம் இறங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. லக்னோ ஆடுகளமானது, முதலில் பேட்டிங் செய்யும் போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், 2-வது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.
இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது. இந்தத் தோல்வியிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் போட்டியின்போது நான் ஏழாவதாக களமிறங்கியது ஏன் என்று கேள்வி கேட்கின்றனர். நான் 7-வது வரிசையில் விளையாடுவதற்கு காரணம் இருக்கிறது. அப்துல் சமதை முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்தோம். அதன் பிறகு டேவிட் மில்லர் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் 7-வது இடத்தில் இறங்கி நான் விளையாடினேன். போட்டியை வெல்வதற்குரிய எங்கள் சிறந்த லெவனை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT