Published : 24 Apr 2025 04:29 AM
Last Updated : 24 Apr 2025 04:29 AM
மும்பை: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்கு நேற்று முன்தினம் வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் என்றும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” என்றார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பாஜக நிர்வாகியுமான விஜேந்தர் சிங் கூறும்போது, “தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது துணிச்சலான வீரர்கள் வரும் காலங்களில் நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் முன்னிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க விரும்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை வத்ஸ் கோஸ்வாமி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பாட்மிண்டன் வீராங்கனைகள், சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே, பார்த்திவ் பட்டேல், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஜேஷ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் தீவிரவாதச் செயலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT