Published : 23 Apr 2025 02:32 PM
Last Updated : 23 Apr 2025 02:32 PM
இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை உள்ளது. தான் இறங்குவதை தோனி போலவே ஒத்திப் போடுகிறார். தோனிக்கு வயதாகிறது, சரி. இவருக்கு என்னவாயிற்று?
அதுவும் ஓர் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஓர் உத்வேகமான தலைமையாக வழிகாட்டியாக இல்லாமல் ஓ.பி. அடிக்கலாமா? திடீரென அவருக்கு இத்தகைய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன என்பதை கம்பீர் உட்பட பிசிசிஐ நிர்வாகம் உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
ஓப்பனிங் இறங்கினார், 4-ம் நிலையில் இறங்கினார், டவுன் ஆர்டரை மாற்றிக் கொண்டே இருக்கிறார். நேற்று கடைசி 2 பந்துகள் இருக்கும் போது இறங்குகிறார். அப்துல் சமது, டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி ஆகியோரை இறக்கி விட்டு இவர் பின்னால் இறங்குகிறார் அதுவும் 2 பந்துகளே மீதமுள்ள போது இறங்குகிறார். என்ன ஆயிற்று பந்த்துக்கு?
அதுவும் அவர்தான் இறங்காமல் இவர்களை இறக்கி விட்டதற்குக் கூறிய காரணம் மேலும் விசித்திரமாக உள்ளது, “என்னவென்றால் பிட்ச் இப்படியிருக்கும் போது அப்துல் சமதை அனுப்பி அதன் மூலம் சாதகப் பலன்களை அடைய விரும்பினோம். மில்லரை இறக்கிப் பார்த்தோம் ஆனால் இத்தகைய விஷயங்கள் குறித்து ஆலோசித்து முன்னோக்குகையில் சிறந்த அணிச்சேர்க்கையை உருவாக்க வேண்டும்” என்கிறார்.
ஏன் இவர் இறங்கவில்லை என்பதற்குப் பதிலா இது? அப்துல் சமது, டேவிட் மில்லர் சரி, ஆனால் கேப்டனாக இவர் ஏன் இறங்கவில்லை, அணி நிர்வாகம்தான் அனைத்தையும் முடிவு செய்து இவரை ஒப்புக்குச் சப்பாணியாக வைத்திருக்கிறதா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். ஏற்கெனவே கே.எல்.ராகுலை அவமானப்படுத்திதான் அனுப்பியது லக்னோ. சரி இப்படி டவுன் ஆர்டரை மாற்றி பயன் கண்டாரா என்றால் அதுவும் இல்லை.
முதலில் பேட்டிங் செய்யும் லக்னோ அணி பேட்டரை இம்பாக்ட் சப் ஆகப் பயன்படுத்தியதும் புரியாத புதிர், ரிஷப் பந்த் என்னும் பேட்டரை இறக்காமல் இம்பாக்ட் சப் இறக்குவது ஏன்?
ரிஷப் பந்த்துக்கு என்னதான் நடக்கிறது என்று செடேஷ்வர் புஜாரா கூறும்போது, “உண்மையிலேயே எனக்கும் புரியவில்லை, என்ன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று. ரிஷப் பந்த் முன்னால்தான் இறங்க வேண்டும், தோனி செய்வது போல் ரிஷப் பந்த் செய்யக் கூடாது, தோனிக்கு வயதாகி விட்டது, ரிஷப் பந்த் இன்னும் இளைஞர்தான்.
ரிஷப் பந்த் பினிஷர் அல்ல, ஆனால் 6வது ஓவர் முதல் 15வது ஓவர் வரை பேட் செய்யும் திறமைப் படைத்தவர்தான் ரிஷப் பந்த். வேகப்பந்து வீச்சிற்கு எதிராக ரன்களைக் குவிக்கும் ரிஷப் பந்த் பிற்பாடு ஸ்பின்னர்களிடம் திணறுகிறார் என்பதுதான் இப்போதைய கவலை” என்றார்.
ஐபிஎல் அணிகள் புதிய திறமைகளைக் கொண்டு வருகிறேன் என்று அனுபவ வீரர்களைப் பலி வாங்க அனுமதிக்கக் கூடாது. பிசிசிஐ இது தொடர்பாக யோசிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT