Published : 23 Apr 2025 02:10 PM
Last Updated : 23 Apr 2025 02:10 PM
ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்தது முதல் எத்தனை சிக்சர்கள், எத்தனை பவுண்டரிகள் என்பதையெல்லாம் பெருமை பொங்க காட்டி வருகிறது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சீரழிந்து வரும் கிரிக்கெட்டின் இன்னொரு இன்றியமையாத பங்கான ஃபீல்டிங் தவறுகளின் எண்ணிக்கையையும், கேட்ச்கள் விடப்பட்டதன் எண்ணிக்கையையும் காட்டினால் கூட அத்தொடருக்கு ஒரு நடுநிலைத் தன்மை கிடைத்து விடும்.
ஐபிஎல் தொடர்களில் விடப்படும் கேட்ச்கள் எண்ணிக்கை தொடருக்குத் தொடர் அதிகரித்து வந்தவண்ணமே உள்ளன. கிரிக் இன்போ தகவல்களின் படி 2025 சீசனில் 431 கேட்ச் வாய்ப்புகளில் 103 கேட்ச்கள் நழுவ விடப்பட்டு தரைத் தட்டியுள்ளன. அதாவது, 76% என்று கேட்சிங் திறமை குறைந்திருப்பதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரம் சுட்டுகிறது.
இந்த சீசனில் 2 மேட்ச்களில் 9 கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டுள்ளது, லீகின் தரமதிப்பைச் சரித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி இடையேயான போட்டி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே மேட்ச் இரண்டிலும்தான் இந்த அதிகப்படியான கேட்ச் ட்ராப்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு போட்டிகளில் அதிக கேட்ச்கள் டிராப் என்பது இந்த இரண்டு போட்டிகளில்தான்.
2023 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஒரு போட்டியில் 8 கேட்ச்கள் டிராப் செய்யப்பட்டுள்ளதே ‘சாதனை’ டிராப்களாக இருந்துள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் கீழே உள்ள சிஎஸ்கே அணி கேட்சிங்கில் படுமோசம். 64.3 % திறமைதான் கேட்ச்சிங்கில் உள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. கேட்ச்கள் விடப்படுவது அல்ல விஷயம், அதனால் மேட்ச் எப்படி எதிரணி பக்கம் திரும்பியது என்பதற்குப் பல உதாரணங்களில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஓப்பனர் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு 2வது பந்தே கலீல் அகமது காட் அண்ட் பவுல்டு வாய்ப்பைக் கோட்டை விட அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 2வது சதம் எடுத்தார். அதே போல் ஆர்சிபியின் ரஜத் படிதாருக்கு விட்ட கேட்சினால் அவர் அரைசதம் கண்டார். இருவருமே ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா 57 ரன்களில் இருந்த போது யஜுவேந்திர செஹல் அவருக்குக் கேட்சை விட 141 ரன்களை அன்று அவர் விளாசித்தள்ளியதும் நடந்தது. அதோடு 246 ரன்களையும் ஊதியது சன் ரைசர்ஸ். சிஎஸ்கேவின் விஜய் சங்கர் எப்படி இந்த மட்டத்திற்கான கிரிக்கெட் வீரர் என்பது சந்தேகமாகவே உள்ளது, 5 வாய்ப்புகளில் 3-ஐ நழுவ விட்டுள்ளார். ஒரு வேளை ஷேன் வார்ன் உயிரோடு இருந்து இவரைப்பார்த்தால் என்ன சொல்வார் என்றால், நாட் பேட்டிங், நாட் பவுலிங், நாட் கேட்சிங் என்று சொல்லியிருக்கக் கூடும்.
சந்தீப் சர்மா பந்தில் விராட் கோலி 7 ரன்களில் இருந்த போது விட்ட கேட்சினால் ஆர்சிபியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் கோலி. அதே போல் கேட்ச் டிராப்பினால் அதிகப் பயன் அடைந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். கிட்டத்தட்ட 17 கேட்ச்கள் அந்த அணியின் பேட்டர்களுக்கு மட்டுமே மற்ற அணிகளினால் விடப்பட்டுள்ளது. ஆனால் அப்படியுமே ராஜஸ்தான் தேறாமல் ஆடி வருகின்றது.
தொட்ட தொன்னூறுக்கும் பயிற்சியாளர்கள் உதவிக்குழுவினர் என்று பட்டாளத்தையே கொண்டுள்ள ஐபிஎல் அணிகள் கேட்சை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஆடிவருவதனால் ஆய பயன் என்னவென்றுதான் தெரியவில்லை. சிக்சர்கள், பவுண்டரிகளை பெருமை பொங்கக் காட்டும் ஐபிஎல் கேட்ச்கள் டிராப் எண்ணிக்கையையும் காட்டினால் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT