Published : 21 Apr 2025 02:08 PM
Last Updated : 21 Apr 2025 02:08 PM
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட, ‘ஹைபிரிட் மாடல்’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மகளிர் அணி தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களிலேயே ஆடவுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது பிசிசிஐ. இதையடுத்து துபாயில் ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடி கோப்பையைத் தட்டிச் சென்றது குறித்து விமர்சனங்களும் எழுந்தன.
இருநாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் ரீதியான வேறுபாடு காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கோ, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ வந்து போட்டிகளில் பங்கேற்காது, இதனையடுத்து இருநாடுகளில் எந்த நாடு போட்டித்தொடரை நடத்தினாலும் பொதுவான மைதானங்களில் தான் போட்டிகளில் இரு அணிகளும் பங்கேற்கும் என்ற ஹைபிரிட் மாடலை இரு நாட்டு வாரியங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் கடந்த சாம்பியன் ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் லாகூரில் நடைபெற்ற போது பாகிஸ்தான் மகளிர் அணி தகுதிச்சுற்றில் 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மகளிர் அணி அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மே.இ.தீவுகள், தாய்லாந்து, வங்கதேச அணிகளை வென்று ஐசிசி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT