Published : 21 Apr 2025 01:22 PM
Last Updated : 21 Apr 2025 01:22 PM
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தனது 6-வது தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக ‘பழிவாங்கும் நேரம்’ என்றெல்லாம் இன்னதுதான் என்று இல்லாமல் இப்போட்டிக்கு போலி விளம்பரங்களையும் ஹைப்களையும் கொடுத்தனர். கடைசியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தோனியின் பலவீனமான படையை சிதறடித்து விட்டனர்.
சிஎஸ்கேவை ஒட்டுமொத்தமாகக் கலைத்து புதிய அணியைக் கட்டமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வடிவேலு ஜோக்ஸ் மற்றும் மீம்களின் படையெடுப்பு போல் சிஎஸ்கே தனது வயதான வீரர்களுடன் பழைய டெக்னிக்குகளுடன் ‘பில்டிங்கு ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ என்பது போல் உள்ளது. நம் கேள்வியெல்லாம் வயது என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். பவுண்டரி அடிக்கும் முயற்சியோ எண்ணமோ கூட இல்லாமல் எப்படி டி20 லீகில் ஆட முடியும் என்று புரியவில்லை. தோனியின் கேப்டன்சி ஒருபுறம் எந்த விதப் புரிதலும் இல்லாமல் கேப்டன்சி என்றால் என்னவென்றே தெரியாமல் செய்வது போல் உள்ளது. இவரா 3 ஐசிசி கோப்பைகளை வென்றார்? ஆச்சரியமாகவே உள்ளது. அதெல்லாம் வெறும் ‘பிறழ்வு’ (Aberration) என்பது போலவே இப்போது தெரிகிறது.
அணித்தேர்வில் தென் ஆப்பிரிக்காவின் இளம் ஹிட்டர் டெவால்ட் பிரெவிஸை ஆடும் லெவனில் எடுக்காமல் பெரும் தவறிழைத்தார். பவர் ஹிட்டர்களே இல்லாத ஒரு அணியில் இவரை எடுக்காமல் விட்டார் தோனி.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் சாண்ட்னர் நன்றாக வீசினார் என்று கருதி இம்பாக்ட் சப் வீரராக தோனி அஸ்வினைக் கொண்டு வந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அன்ஷுல் காம்போஜ் என்பவரைக் கொண்டு வந்திருக்க வேண்டும். சிக்கனமாக அஸ்வின் வீசினாலும் நோக்கம் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே. ஆனால், அது கைகூடவில்லை.
மூன்றாவதாக ரோஹித் சர்மாவும், சூர்யகுமாரும் போட்டு புரட்டி எடுக்கின்றனர். ஆனால் நூர் அகமதுவையும் பதிரனாவையும் முன்னமேயே கொண்டு வராமல் தாமதப்படுத்தினார். மும்பை 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பு 88 ரன்கள் என்று இருக்கும் போது நூர் அகமதுவைக் கொண்டு வருகிறார் தோனி. பதிரனாவை 14-வது ஓவரில் கொண்டு வருகிறார். ஆட்டத்தின் போக்கு மாறும்போது தன் உத்தியையும் மாற்ற வேண்டும். ஸ்மார்ட் கேப்டன்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ஆனால், தோனியோ தோற்றால் என்ன? ஜெயித்தால் என்ன? என்ற ஒரு மனநிலைக்கு வந்தவர் போல் கேப்டன்சி செய்கிறார்.
மேலும், பேட்டிங்கில் முதல் பவுண்டரியை அடிக்கவே 3 ஓவர்கள் ஆகின்றன, மற்ற அணிகளெல்லாம் குறைந்தது 7 பவுண்டரிகளையாவது அடித்து விடுகின்றனர். அதே போல் மிடில் ஓவர்களில் 27 பந்துகளில் பவுண்டரி அடிக்கும் முயற்சி கூட இல்லை. இதுதான் ஆச்சரியமாக இருப்பதோடு புதிராகவும் உள்ளது. தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார், பிளெமிங் என்ன செய்து கொண்டிருக்கிறார், இன்னும் இருக்கும் பயிற்சியாளர் கூட்டம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? அதுவும் 17 மற்றும் 18-வது ஓவரில் பவுண்டரியே அடிக்கவில்லை என்பதை என்ன கணக்கில் கொண்டு சேர்ப்பது?
இதே பிட்சில்தான் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் 430 ரன்கள் அடிக்கப்பட்டன. அந்தப் பிட்சில் சிஎஸ்கே பேட்டிங் ஆமையை விட மந்தமாக இருந்தது. 17 வயது ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசியதை வைத்தாவது அணியில் இளம் வீரர்களின் அவசியத்தை உணர முடியவில்லையா? ஆனால், இப்போதும் கூட தோனி என்ன கூறுகிறார்? அணியில் மாற்றங்கள் பெரிய அளவில் தேவையில்லை, இருக்கும் வீரர்கள் பெர்ஃபார்ம் செய்தாலே போதும் என்கிறார். எப்போது பெர்ஃபார்ம் செய்வது ஐபிஎல் முடிந்து வீட்டுக்குப் போன பிறகா?
தவறுகள் செய்கிறோம் என்பதை திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டு அதனை தீர்க்க சரியான தீர்வுகளை நோக்கி செல்லாதவரை சிஎஸ்கே அணி மாறிவரும் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ஏற்ற அணியாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள இயலாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT