Published : 21 Apr 2025 09:08 AM
Last Updated : 21 Apr 2025 09:08 AM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்த இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டு!

வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்து முத்திரையைப் பதித்துள்ளார். முதல் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்ட சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 180 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டது.

இந்தப் போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி எதிரணியினரை மிரள விட்டார். தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி ராஜஸ்தான் அணியின் இளம்புயலாக உருவெடுத்துள்ளார். மேலும் மிக இளம்வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார். அவர் 14 ஆண்டுகள் 23 நாட்களே ஆன நிலையில் களம்கண்டுள்ளார். இதற்கு முன்னர் ஆர்சிபி வீரர் பிரயாஸ் ராய் பர்மன் (16 ஆண்டு 157 நாட்கள்), பஞ்சாப் கிங்ஸின் முஜிப் உர் ஹர்மான் (17 ஆண்டுகள் 11 நாட்கள்), ராஜஸ்தானின் ரியான் பராக் (17 ஆண்டு 152 நாட்கள்), டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரதீப் சங்வான் (17 ஆண்டு 179 நாட்கள்) ஆகியோர் இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

லக்னோ அணியின் ஷர்துல் தாக்குர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ராத்தி ஆகியோரது பந்துகளை எளிதாக எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. எதிர்முனையில் மற்றொரு இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினாலும், ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது வைபவின் துடிப்பான ஆட்டம்தான்.

மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் நுழைந்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கண்ணீர் சிந்தியவாறு மைதானத்திலிருந்து பெவிலியன் நோக்கி நடந்தார் வைபவ் சூர்யவன்ஷி. தன்னால் முதல் போட்டியில் அரை சதமாவது விளாச முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி காந்த் கூறும்போது, “வைபவ் சூர்யவன்ஷியைப் பார்க்கும்போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினை பார்த்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.” என்றார்.

பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமஸ்திபூரை சேர்ந்தவர்தான் இந்த வைபவ் சூர்யவன்ஷி. தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில்தான் தனது ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டியை மும்பை அணிக்கு எதிராக விளையாடினார். மேலும் ஆசியக் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியிலும் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார்.

அவரது திறமையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வுக் குழுவினர் பார்த்து, மெகா ஏலத்தில் தேர்வு செய்துள்ளனர். ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷியை, ஐபிஎல் போட்டியின் பாதியில்தான் அறிமுகம் செய்துள்ளனர். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும் அவரது பேட்டிங் டெக்னிக்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

“சஞ்சு சாம்சன் காயமடைந்து இருந்ததால் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தியுள்ளார் வைபவ். போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி வந்தார். வலைப் பயிற்சியின்போது சிறப்பாக விளையாடினார். வரும் போட்டிகளிலும் அவரது விளாசல் தொடரும்” என ஆர்ஆர் பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே தெரிவித்தார்.

“ஐபிஎல் போட்டியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒருவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காக விழித்துள்ளேன். தரமான அறிமுகம்” கூகுள் நிருவான தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

“கடைசி ஓவரை வீசும்போது சிறிது பதற்றமாக இருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்ஸ்மேன் அடித்த பந்தை நான் தடுத்த போது, கையே உடைந்துவிட்டது என்று நினைத்தேன். யார்க்கர் பந்துகளை வீசுவதுதான் எனது வலிமை. இதை ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசியது இந்தப் போட்டியில் பலன் அளித்தது பவுலிங் செய்யும் போது ஒருபோதும் ஸ்கோரை பார்க்க விரும்ப மாட்டேன். கடைசி ஓவர் வீசும் போது முதல் 3 பந்துகளில் பவுண்டரியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்” என லக்னோ வீரர் அவேஷ் கான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x