Published : 20 Apr 2025 09:07 AM
Last Updated : 20 Apr 2025 09:07 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. மறுபுறம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த வெற்றி சிஎஸ்கேவுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. காயம் காரணமாக ருதுராஜ் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் தோனி பொறுப்பேற்றதும் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் ஷேக் ரஷீத் அறிமுக வீரராக இடம்பெற்று 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்தார். இதேபோன்று அன்ஷுல் கம்போஜ், அதிரடி பட்டாளங்கள் நிறைந்த லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருந்தார். முக்கியமாக அபாயகர பேட்ஸ்மேனான நிகோலஸ் பூரனை விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இவர்கள் இருவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.
ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகியோர் பார்முக்கு திரும்பி இருப்பது பேட்டிங்குக்கு பலம் சேர்க்கக்கூடும். தோனி மீண்டும் பினிஷர் ரோலை சிறப்பாக செய்யத் தொடங்கி உள்ளது அணியின் முன்னேற்றத்துக்கு சீரான வகையில் உதவக்கூடும். 5 ஆட்டங்களில் 9.16 சராசரியுடன் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ராகுல் திரிபாதி மற்றும் 118 ரன்கள் எடுத்துள்ள விஜய் சங்கர் ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து மட்டையை சுழற்றினால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.
அணியில் புதிதாக இணைந்துள்ள டெவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மகத்ரே ஆகியோருக்கு நேரடியாக விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுவது அரிதாகவே இருக்கக்கூடும். எனினும் ராகுல் திரிபாதியின் மோசமான பார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டு டெவால்ட் பிரேவிஸ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் கடந்த சீசன்களில் டெவால்ட் பிரேவிஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரையில் கலீல் அகமது சீரான செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக அன்ஷுல் கம்போஜ் செயல்பட்டு வருகிறார். சுழலில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ள நூர் அகமது மும்பை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக செயல்பட்ட வான்கடே மைதானத்தின் தன்மையை சரியாக கணித்து பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. டிரென்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரும் ரிதமுக்கு திரும்பி உள்ளனர். அதேவேளையில் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுடன் வில் ஜேக்ஸும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். பிரதான சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்திருந்தார். இதனால் அவருக்கு பதிலாக விக்னேஷ் புதூர் களமிறக்கப்படக்கூடும்.
பேட்டிங்கில் ரியான் ரிக்கெல்டன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் 16 பந்துகளில் 26 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன்திர் ஆகியோரும் சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு தங்களது தாக்குதல் ஆட்டத்தால் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நடப்பு சீசனில் மும்பை - சிஎஸ்கே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி முயற்சிக்கக்கூடும்.
3-வது வெற்றியை நோக்கி.. வான்கடே மைதானத்தில் நடப்பு சீசனில் மும்பை அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபிக்கு எதிராக தோல்வி கண்டிருந்த மும்பை அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை தோற்கடித்து இருந்தது. தற்போது 3-வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
மைதானம் எப்படி? - மும்பை வான்கடே மைதானம் சிவப்பு மண் ஆடுகளத்தை கொண்டது. பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். எனினும் தொடக்க ஓவர்களில் பவுன்ஸ் இருக்கும். இதை பயன்படுத்தி பந்து வீச்சாளர்கள் சரியான திசை மற்றும் லென்ந்த்தில் வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் ரன்கள் குவிப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. இதுவரை வான்கடே மைதானத்தில் 118 டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 55 முறை வெற்றி பெற்றுள்ளன. இலக்கை துரத்திய அணிகள் 63 முறை வெற்றி கண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT