Published : 19 Apr 2025 09:01 AM
Last Updated : 19 Apr 2025 09:01 AM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த ஹைதராபாத் அணியை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை அணியின் பந்து வீச்சு துறை. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 40 ரன்கள் சேர்த்தார்.
டிராவிஸ் ஹெட் 28, இஷான் கிஷன் 2, நித்திஷ் குமார் ரெட்டி 19 ரன்கள் சேர்த்தனர். இறுதி பகுதியில் ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில், 37 ரன்களும் அன்கித் வர்மா 8 பந்துகளில் 18 ரன்களும் விளாசியதால் ஹைதராபாத் அணியால் 160 ரன்களை கடக்க முடிந்திருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சில் வில் ஜேக்ஸ் 3 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
163 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரியான் ரிக்கெல்டன் 31, ரோஹித் சர்மா 26, வில் ஜேக்ஸ் 36, சூர்யகுமார் யாதவ் 26, ஹர்திக் பாண்டியா 21, திலக் வர்மா 21 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியது.
போட்டி முடிவடைந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நாங்கள் பந்துவீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும், துல்லியமாகவும் இருந்தது. எங்களின் எளிய அடிப்படைத் திட்டங்களை சரியாகப் பின்பற்றினோம். சில வகை பந்துகளை அடித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இல்லை என்பதை ஆடுகளத்தில் உணர்ந்தோம். அதன்படி திட்டம் அமைத்து எதிரணியை ரன் குவிக்க விடாமல், அழுத்தத்துக்கு உள்ளாக்கினோம்.
ஆடுகளத்தைப் பொறுத்தவரை, பார்க்க நன்றாகத் தெரிந்தாலும், அதன் மேல் இருந்த புற்கள் காரணமாக பந்து சில நேரங்களில் நின்று வந்தது. தீபக் சாஹர் வீசிய சில பந்துகளிலேயே இது தெளிவாகத் தெரிந்தது. இதனால், இந்த விக்கெட்டில் வேகத்தை மாற்றி வீசுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் விரைவிலேயே உணர்ந்தோம். இதன் பின்னர் அதற்கான திட்டத்தை செயல்படுத்த தொடங்கினோம்.
பந்துகளை கலந்து வீச முயற்சித்தோம். வேகம் குறைந்த பந்துகள் ஆடுகளத்தில் நின்று வந்தாலும் அதை திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் வீசும்போது பேட்ஸ்மேன் கணிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் சோர்வடைந்திருந்த மிடில் ஓவர் களில் யார்க்கர்களை மிகச் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் வீசினோம்.
வில் ஜேக்ஸிடம் 3 வகையான திறமைகள் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. அவர் மிகச் சிறந்த ஃபீல்டர். மேலும் முக்கியமான கட்டங்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அத்துடன் பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறமையும் இருக்கிறது. இந்த திறமைகளால்தான் வில் ஜேக்ஸ் அணியில் முக்கிய அங்கம் வகிக்கிறார். இந்த ஆட்டம் அவருக்கு கை கொடுத்ததில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.
இலக்கை துரத்திய போது 42 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட அந்த நேரத்தில் அவசரப்படாமல், பொறுமையாக விளையாட முடிவு செய்தோம். தேவை இல்லாமல் விக்கெட்டுகளை இழந்து திடீரென தடுமாறி, வெற்றி வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பொறுமையாகச் சென்று நிலைமையை சீர் செய்யலாம் என தீர்மானித்தோம். பவுண்டரிகள் தானாகவே கிடைக்கும், அவை வரத் தொடங்கியவுடன் அழுத்தம் குறையும் என்பதை உணர்ந்திருந்தோம். போட்டியின் இறுதிப் பகுதியில் வேகத்தை அதிகரித்து வெற்றியை உறுதி செய்தோம். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT