Published : 19 Apr 2025 08:26 AM
Last Updated : 19 Apr 2025 08:26 AM

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியில் 5-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இன்றைய ஆட்டம் உட்பட ராஜஸ்தான் அணிக்கு 7 ஆட்டங்களே எஞ்சியுள்ளது.

இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் கணிசமான அளவில் வெற்றிகளை குவித்தாகவே வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிலைத்தன்மையும், உத்வேகமும் இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் ஆகியோரை நம்பியே உள்ளது. ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்படுவது இல்லை.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெட்மயர், துருவ் ஜூரெல் களத்தில் நின்ற நிலையில் கடைசி 3 ஓவர்களில் இந்த ஜோடியால் 31 ரன்களை சேர்க்க முடியாமல் போனது. மேலும் ஹெட்மயர் சூப்பர் ஓவரிலும் பதற்றமுடன் விளையாடியது அணியின் வெற்றியை பறித்தது. இதேபோன்று பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த வீரரும் இல்லாதது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசி 19 ரன்களை தாரை வார்த்திருந்தார். இதில் 4 வைடுகள், ஒரு நோபாலும் அடங்கும். அவரது இந்த ஓவர்தான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மேலும் சூப்பர் ஓவரில் சந்தீப் சர்மா பந்துவீசிய விதமும் டெல்லி அணிக்கு வெற்றியை தாரைவார்த்து கொடுப்பது போன்று இருந்தது.

கடந்த ஆட்டத்தில் விலா பகுதியில் ஏற்பட்ட வலியால் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய சஞ்சு சாம்சன் குணமடைந்துள்ளார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என்றே கூறப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ராஜஸ்தான் அணி பேட்டிங், பந்து வீச்சில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தொடர்ச்சியாக 2 அரை சதங்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றக்கூடும்.

மேலும் டெல்லி அணிக்கு எதிராக 51 ரன்களும், சிஎஸ்கேவுக்கு எதிராக 81 ரன்களும் விளாசிய நித்திஷ் ராணாவிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ஷர்துல் தாக்குர், அவேஷ் கான், திக்வேஷ் ராத்தி, ரவி பிஷ்னோய் ஆகியோரை உள்ளடக்கிய லக்னோ அணியின் பந்து வீச்சு துறை ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்திருந்தது. 357 ரன்கள் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிகோலஸ் பூரன், 295 ரன்கள் விளாசியுள்ள மிட்செல் மார்ஷ் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு துறைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். ரிஷப் பந்த் கடந்த ஆட்டத்தில் 49 பந்துகளில் 63 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.

எய்டன் மார்க் ரம், ஆயுஷ் பதோனி ஆகியோரும் தங்களது அதிரடியால் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டேவிட் மில்லர் மட்டுமே தடுமாறி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர், பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். நடப்பு சீசனில் லக்னோ அணி 3 ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்தது. மற்ற ஆட்டங்கள் அனைத்திலும் 160 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி ரன் வேட்டையில் ஈடுபடுவதில் முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சில் மயங்க் யாதவ் அணியுடன் இணைந்துள்ளார். அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறைக்கும் உத்வேகம் கிடைக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x