Published : 18 Apr 2025 09:26 PM
Last Updated : 18 Apr 2025 09:26 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் தனக்கும் இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை (சனிக்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள ராஜஸ்தான் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு முன்னேற அந்த அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் இனி முக்கியம்.
இந்தச் சூழலில் டெல்லி உடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்தார். ‘ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் அவருக்கு ஏற்பட்டுள்ள காய பாதிப்பு குறித்து முறையாக தெரியவரும். அதன் பின்னர் நாங்கள் முடிவு எடுப்போம்’ என பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார். அதனால் லக்னோ உடனான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது. அவர் விளையாடாத பட்சத்தில் அது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையும்.
இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் சஞ்சு சாம்சன் உடன் உங்களுக்கு கருத்து முரணா என்ற கேள்விக்கு ராகுல் திராவிட் பதில் அளித்தார். “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுக்கும் அனைத்து முடிவுகள் மற்றும் மேற்கொள்ளும் விவாதங்களில் சஞ்சு சாம்சன் முக்கிய அங்கம் வகிக்கிறார். அவருக்கும் எனக்கும் இடையே சிறந்த புரிதல் உள்ளது. கிரிக்கெட்டில் அணிகள் தோல்வியை தழுவும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.
நாங்கள் சிறந்த முறையில் செயல்படவில்லை எனபதற்கான விமர்சனத்தை எதிர்கொள்கிறோம், ஏற்கிறோம். நிச்சயம் அது குறித்து யோசிப்போம். ஆனால், அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை ஏற்க மாட்டோம். 7 ஆட்டங்களில் வெறும் 2-ல் தான் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சயம் எங்கள் அணி வீரர்கள் அவர்களது ஆட்டத்திறனுக்கு ஏற்ப விளையாடவில்லை. அதனால் இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதில் சந்தேகம் இல்லை. அணியில் ஸ்பிரிட் என்பது சிறப்பாக உள்ளது. வீரர்கள் கடினமாக பயிற்சி மேற்கொள்கிறார்கள்” என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT