Published : 18 Apr 2025 07:41 PM
Last Updated : 18 Apr 2025 07:41 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் அதிரடி இளம் வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. காயமடைந்த குர்ஜப்னீத் சிங்குக்கு மாற்றாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டி20 பாணி கிரிக்கெட் என்றாலே அதிரடி பேட்டிங் தான். டெவால்ட் பிரெவிஸ் அந்த வகையிலான பேட்ஸ்மேனான. அஞ்சாமல் பந்தை விளாசுவர். ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்படுகிறார். ‘பேபி ஏபி’ என இவரை அன்போடு அழைப்பதுண்டு.
21 வயதான அவர் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீகுகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல், சிபிஎல், எம்எல்சி, எஸ்ஏ20 லீக் மாதிரியான தொடர்களில் விளையாடி உள்ளார். எஸ்ஏ20 லீக் 2025 சீசனில் எம்ஐ கேப்டவுன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. அந்த சீசனில் 10 இன்னிங்ஸ் விளையாடி 291 ரன்கள் எடுத்தார். 17 ஃபோர்கள், 25 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 184. அந்த சீசனில் அதிக ரன் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்களில் அதிக சிக்ஸர் மற்றும் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தவர் டெவால்ட் பிரெவிஸ் தான்.
மொத்தம் 81 டி20 போட்டிகளில் விளையாடி, 1787 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் 10 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனில் அவரை ரூபாய் 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அவருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிக்ஸர்கள் விளாசி வாணவேடிக்கை காட்டுவார் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT