Published : 18 Apr 2025 05:10 PM
Last Updated : 18 Apr 2025 05:10 PM

மெக்கல்லம் 158, ஆர்சிபி மகா தோல்வி... ஐபிஎல் ‘பிறந்த தின’ ஃப்ளாஷ்பேக்!

2008-ம் ஆண்டு இன்றைய தினம் (ஏப்.18) ஐபிஎல் பிறந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையே முதல் போட்டி மூலம் ஐபிஎல் அன்று இன்றைய தினத்தில் பிறந்தது. கோலாகலமான, வண்ணமயமான பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஐபிஎல் இன்றைய தினத்தில் தொடங்கியது.

இன்று இந்தத் தொடருக்கு இருக்கும் கவர்ச்சியை உருவாக்கிய பிதாமகர் நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்டர் பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடித்த 158 ரன்கள்தான் என்றால் அது மிகையாகாது. 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார் பிரெண்டன் மெக்கல்லம். முதல் ஐபிஎல் போட்டியிலேயே கொல்கத்தா 222/3 என்ற பெரிய இலக்கை எட்ட ஆர்சிபி அணி 82 ரன்களுக்குச் சுருண்டு மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

இத்தகைய ஐபிஎல் பிறந்தது லலித் மோடியின் மூளையில், அதன் பிறகு அவர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிசிசிஐ-யின் வருவாயை உச்சத்திற்குக் கொண்டு சென்றதில் லலித் மோடியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. அப்போது முதல் ஏலத்தில் எம்.எஸ்.தோனி 1.5 மில்லியன் டாலர்களுக்கு சிஎஸ்கேவினால் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த ஐபிஎல் ஆடிய பெரிய வீரர்கள் இன்று பயிற்சியாளர்களாக உள்ளனர். ஆனால் அன்று அறிமுகம் ஆன பல விளிம்புநிலை வீரர்கள் இன்று என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அன்று கங்குலி கேப்டன். அணியில் பிரெண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், டேவிட் ஹஸ்ஸி, முகமது ஹபீஸ், லஷ்மி சுக்லா, விருத்திமான் சஹா, அஜித் அகார்கர், அசோக் டிண்டா, முரளி கார்த்திக், இஷாந்த் சர்மா. அப்போதைய ஆர்சிபி அணியின் கேப்டன் ராகுல் திராவிட் என்றால் இப்போது ஆச்சரியமாகவே இருக்கும். ராகுல் திராவிட், வாசிம் ஜாஃபர், விராட் கோலி, ஜாக் காலிஸ், கேமரூன் ஒயிட், மார்க் பவுச்சர், பாலச்சந்திர அகில், ஆஷ்லி நோஃப்கே, பிரவீண் குமார், ஜாகீர் கான், சுனில் ஜோஷி.

ராகுல் திராவிட் டாஸ் வென்று முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்து பெரும் தவறிழைத்தார். கங்குலியும் பிரெண்டன் மெக்கல்லமும் இறங்கினர். என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை. பிரெண்டன் மெக்கல்லம் பிளே என்று சொன்னவுடன் அடிக்கத் தொடங்கியதுதான் நிறுத்தவே இல்லை. ஜாகீர் கான், பிரவீண் குமார், ஜாக் காலீஸ் உட்பட எவரது பந்துகளுக்கும் மரியாதை இல்லை. இத்தனைக்கும் பிரவீன் குமார் முதல் ஓவர் அட்டகாசம். முதல் 6 பந்துகளில் மெக்கல்லம் ரன் எதையும் எடுக்கவில்லை.

ஆனால், அடுத்து வந்த ஜாகீர் கானின் முதல் 4 பந்துகளிலேயே 18 ரன்கள். ஒரு பிளிக் ஷாட் சரியாக மாட்டவில்லை ஆனால் தேர்ட்மேனில் சிக்ஸ் போனது. ஜாகீர் கானைத் தூக்கி விட்டு நோஃப்கே வந்தார் அவர் ஓவரில் 23 ரன்கள், ஸ்கொயர் லெக்கில் புல் சிக்ஸ், எக்ஸ்ட்ரா கவரில் பெரிய சிக்ஸ் என்று மெக்கல்லம் பட்டாசு வெடித்தார். பிறகு இவரையும் பவுலிங்கிலிருந்து தூக்கினர். அப்போது மெக்கல்லம் 10-15 பந்துகள் பவுண்டரி இல்லாமலே ஆடினார். ஆனால் சுனில் ஜோஷி வந்தவுடன் ஸ்லாக் ஸ்விப்கள் பரிணமிக்க மீண்டும் சிக்சர் மழை. கேமரூன் ஒயிட், ஜாக் காலிஸ் பந்துகள் மைதானத்தை விட்டு பறந்தன.

அப்போதுதான் இப்போது ஆடப்படும் ஸ்கூப் ஷாட்டை மெக்கல்லம் முதன் முதலில் ஆடிக்காட்டினார், ஜாகிர் கான் பந்தை முழங்காலை மடக்கிக் கொண்டு ஃபைன் லெக் மேல் ஸ்கூப் சிக்ஸ் அடித்தார். எப்படியோ 3 ஓவர்கள் தப்பிய பிரவீண் குமார் தனது கடைசி ஓவரில் சிக்க 3 சிக்சர்களை விளாசிய மெக்கல்லம் 13 சிக்சர்களை அடித்து முதல் போட்டியிலேயே ஐபிஎல் சிக்சர்கள் சாதனையை நிறுவினார். இந்த இன்னிங்சில் 32 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அரைசதம் கண்ட மெக்கல்லம், அடுத்த 21 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து 53 பந்துகளில் சதம் கண்டார். 8 பவுண்டரி 7 சிக்சர்கள் என்று விளாசியிருந்தார். அடுத்த 20 பந்துகளில் மேலும் 6 சிக்சர்களுடன் 58 ரன்களை விளாசி 158 ரன்களை எடுத்து அசத்தினார். ஷாரூக்கானுக்கு ஒரே கொண்டாட்டம்.

அடுத்து இறங்கிய ஆர்சிபி அணி டிண்டா, இஷாந்த் சர்மா, அஜித் அகார்க்கரிடம் மடிந்தது. விராட் கோலி டிண்டா பந்தில் பவுல்டு ஆகி 1 ரன்னில் வெளியேறினார். ராகுல் திராவிட் இஷாந்த் சர்மா பந்தில் பவுல்டு ஆகி 3 ரன்கள், இப்படியாக ஆர்சிபியின் டாப் ஆர்டர் வீரர்களின் ஸ்கோர் தொலைபேசி எண்கள் போல் 2, 6, 1, 8, 6, 7, 0,9 என்று இருந்தது, பிரவீன் குமார் ஒருவர்தான் இரட்டை இலக்க ரன்னை எட்டி 18 ரன்கள் எடுத்தார். 15.1 ஓவரில் ஆர்சிபி 82 ரன்களுக்குச் சுருண்டு 140 ரன்கள் வித்தியாச தோல்வியைக் கண்டது. அகார்கர் 3 விக்கெட், கங்குலி, அசோக் டிண்டா 2 விக்கெட். முதல் ஐபிஎல் கோப்பையை ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது வேறு கதை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x