Published : 17 Apr 2025 06:13 AM
Last Updated : 17 Apr 2025 06:13 AM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு 3 மாதங்களுக்குப் பிறகு களத்துக்கு திரும்பி உள்ள நிலையில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் தடுமாறி வருகிறார்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் ஏதும் கைப்பற்றாத பும்ரா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யார்க்கர்களை வீசுவதில் தடுமாற்றம் அடைந்து 44 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். 31 வயதான அவருக்கு இன்றைய ஆட்டம் சோதனை களமாக இருக்கக்கூடும். ஏனெனில் ஹைதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி கண்டிருந்தது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் ஆகியோரை உள்ளடக்கிய ஹைதராபாத் அணியின் தாக்குதல் பேட்டிங் வரிசை பும்ராவுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க பேட்டிங்கில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 11.20 சராசரியுடன் 56 ரன்களே எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன், நடுவரிசை பேட்ஸ்மேனான திலக் வர்மா ஆகியோர் சீராக ரன்கள் சேர்த்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். சூர்யகுமார் யாதவ், நமன் திர் ஆகியாரும் நிலைத்தன்மையுடன் விளையாடும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்களும், டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களும் விளாசி 246 ரன்கள் இலக்கை எளிதாக எட்ட உதவியிருந்தனர்.
வான்கடே மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 135 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார். இதனால் அவர், மும்பை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர்களுக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT