Published : 15 Apr 2025 07:16 AM
Last Updated : 15 Apr 2025 07:16 AM

அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப்? - கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் இன்று மோதல்

ஸ்ரேயஸ் ஐயருடன் பிரியன்ஷு ஆர்யா.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது பஞ்சாப் அணி. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 246 ரன்களை இலக்காக கொடுத்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசி தனிநபராக பஞ்சாப் அணியின் வெற்றியை சூறையாடினார்.

இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. தட்டையாக காணப்படும் இந்த மைதானத்தில் எவ்ளவு ரன்கள் குவித்தாலும் அது பாதுகாப்பானதாக இருந்தது இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. இன்றைய ஆட்டத்தை பஞ்சாப் அணி தனது சொந்த மைதானமான முலான்பூரில் விளையாடுகிறது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்கக்கூடும்.

எனினும் முலான்பூர் ஆடுகளமும் பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்து வருகிறது. நடப்பு சீசனில் இங்கு நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்த இலக்கை அந்த அணிகள் பாதுகாத்து வெற்றியும் கண்டுள்ளன. ராஜஸ்தான் அணி 205 ரன்களை குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றிருந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 219 ரன்களை குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியிருந்தது.

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் தட்டையாக இருக்கும் பட்சத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடினாலும் அது பாதுகாப்பானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ரிங்கு சிங், வெங்கேடஷ் ஐயர், ரகுவன்ஷி ஆகியோர் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

இவர்களுடன் அஜிங்க்ய ரஹானே, குயிண்டன் டி காக், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் மட்டையை சுழற்றக்கூடியவர்கள். இது ஒருபுறம் இருக்க நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூட 9 ரன்களுக்கு கீழ் வழங்கியது இல்லை. யுவேந்திர சாஹல் 5 ஆட்டங்களில் விளையாடி ஓவருக்கு சராசரியாக 11.13 ரன்களை வாரி வழங்கி உள்ளார். அதேவேளையில் 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார்.

ஒருவேளை போட்டிக்கான ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டால் அதுவும் பஞ்சாப் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் கொல்கத்தா அணியில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நேரன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். மேலும் மொயின் அலியும் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார்.

ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணி தட்டையான ஆடுகளங்களிலும் சரி, மந்தமான ஆடுகளங்களிலும் சரி ஆபத்தான அணியாகவே திகழக்கூடும். கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x