Published : 14 Apr 2025 09:51 AM
Last Updated : 14 Apr 2025 09:51 AM
இந்த ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ருத்ர தாண்டவமாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா. அவரின் துல்லியத் தாக்குதலில் ஐபிஎல் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார் அபிஷேக்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்து மிரட்டியது. பிரியன்ஷ் ஆர்யா 36, பிரப்சிம்ரன் 42, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 82, நேஹல் வதேரா 27, மார்கஸ் ஸ்டாயினிஸ் 34 ரன்கள் குவித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிக அளவு ரன்கள் குவித்ததால் இலக்கை எட்டுவது கடினம் என ஹைதராபாத் ரசிகர்கள் முதலில் நினைத்தனர். ஆனால் ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்து அசத்தலான ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். டிராவிஸ் 37 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நின்ற அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 14 பவுண்டரிகள் பறந்தன. 10 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார் அபிஷேக் சர்மா. எட்டுவதற்கு கடினமான இலக்காக இருந்தபோதிலும், அபிஷேக் சர்மாவின் பேட்டிலிருந்து வந்த துல்லியத் தாக்குதல் அதை எளிதாக மாற்றிவிட்டது. அவரது ஒவ்வொரு சிக்ஸருக்கும் மைதானத்தில் எழுந்த ரசிகர்களின் கூச்சல் அடங்குவதற்கு நீண்ட நேரமானது.
பஞ்சாப் கிரிக்கெட்டுக்காக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 2015-16-ல் விஜய் மெர்ச்செண்ட் (16 வயதுக்குட்பட்டோர்) போட்டியில் விளையாடி 1,200 ரன்கள் குவித்து மிரட்டினார். அதன்பிறகு 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்குத் தலைமையேற்று கோப்பையை வென்றார். 2018-ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
பேட்டிங்கில் ஜொலிக்கும் அபிஷேக் சர்மா, பந்துவீச்சிலும் வல்லவரே, இடது கையால் சுழற்பந்து வீசுவதில் நிபுணத்துவம் பெற்ற அபிஷேக் சர்மா, தனது பேக்ஸ்பின்னிங் லெக் கட்டர்களால் சக அணி வீரர்களை மிரள வைப்பார்.
2018-ல் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்தார். அடுத்த ஆண்டிலேயே ஹைதராபாத் அணிக்கு வந்துவிட்டார். 2019-ம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தாலும், கடந்த 2024 சீசனில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலித்தார் சர்மா.
2022-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக வலம் வருகிறார். 2022 ஐபிஎல் சீசனில் 426 ரன்களைக் குவித்தார். 2024-ல் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பஞ்சாப் கிங்கஸ் உடனான ஆட்டத்தில் அவர் குவித்த 141 ரன்கள் ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணி வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறிஸ் கெயில் (171 ரன்கள், ஆர்சிபி-2013), 2-வது இடத்தில் பிரண்டன் மெக்கல்லம் (158 ரன்கள், கொல்கத்தா அணி, 2008) ஆகியோர் உள்ளனர். இந்த ஆட்டத்தின்போது 40 பந்துகளிலேயே சதத்தை எட்டி சாதனையாளர்கள் வரிசையிலும் இணைந்துள்ளார். தொடர்ந்து தோல்விகளையே பெற்று வந்த ஹைதராபாத் அணிக்கு இந்த வெற்றி ஓர் உத்வேகமாக அமைந்துள்ளது.
தனது அதிரடி ஆட்டம் குறித்து அபிஷேக் சர்மா கூறும்போது, “இந்த சீசனில் தொடக்க ஆட்டங்களில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், அணி நிர்வாகமும், கேப்டன் பாட் கம்மின்ஸும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை அற்புதமாக விளையாடினேன்.
இந்த போட்டியில் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.
அபிஷேக் சர்மாவின் துல்லியத் தாக்குதல் இந்த சீசனில் உள்ள எஞ்சிய போட்டிகளிலும் தொடரும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
துண்டுச்சீட்டின் ரகசியம் என்ன? - ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.இந்த ஆட்டத்தில் அசத்தலாக விளையாடிய அபிஷேக் சர்மா, 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 40 பந்துகளிலேயே அவர் சதத்தை எட்டினார். தொடர் தோல்வி பெற்று வந்த ஹைதராபாத் அணி இதன்மூலம் வெற்றிப்
பாதைக்குத் திரும்பியது.
போட்டியின்போது சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அபிஷேக் சர்மா ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார். அந்த துண்டுச்சீட்டில், ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான் (This one is for Orange Army) என எழுதப்பட்டிருந்தது. இந்தத் துண்டுச்சீட்டை ரசிகர்களை நோக்கி உற்சாகமாக காட்டி மகிழ்ந்தார் அபிஷேக். இந்தத் துண்டுச்சீட்டை கடந்த 6 போட்டிகளாக தனது பாக்கெட்டிலேயே அபிஷேக் வைத்திருந்தார். இந்தப் போட்டியில் சதமடித்த மகிழ்ச்சியில் அதை வெளியே எடுத்து ரசிகர்களுக்கு காண்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT