Published : 12 Apr 2025 08:16 AM
Last Updated : 12 Apr 2025 08:16 AM
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்ன்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சீசனை பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய குஜராத் அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 238 ரன்கள் குவித்து அசத்தியிருந்தது.
நிகோலஸ் பூரன் 36 பந்துகளில், 87 ரன்களும் மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 81 ரன்களும் விளாசி மிரட்டியிருந்தனர். மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் தன் பங்குக்கு 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் 5 ஆட்டங்களில் விளையாடி 19 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ரிஷப் பந்த் பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேனான நிகோலஸ் பூரனுக்கும், குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்குமான மோதலை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டக்கூடும். நிகோலஸ் பூரன் 5 ஆட்டங்களில் 288 ரன்கள் வேட்டையாடி நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் 24 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகள் விளாசி உள்ளார். ஸ்டிரைக் ரேட் 225 ஆக உள்ளது. அதேவேளையில் முகமது சிராஜ் 5 ஆட்டங்களில் 10 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பார்மில் உள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.70 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் வீசும் லென்ந்த்தை பவர்பிளேவில் முகமது சிராஜ் பயன்படுத்துவது பலமாக உள்ளது.
8 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர், ஓவருக்கு சராசரியாக 7.05 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சில் சாய் கிஷோர் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக மாறியுள்ளார். ஓவருக்கு 7.25 ரன்களை மட்டுமே வழங்கியுள்ள அவர், இந்த சீசனில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். கடந்த ஆட்டத்தில் ரஷித் கான் 2 விக்கெட்கள் கைப்பற்றி பார்முக்கு திரும்பி உள்ளதும் அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும்.
பேட்டிங்கில் 273 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 203 ரன்கள் சேர்த்துள்ள ஜாஸ் பட்லர் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் 5 ஆட்டங்களில் 37 சராசரியுடன் 148 ரன்கள் சேர்த்துள்ள ஷுப்மன் கில் அதிரடி பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு திக்வேஷ் ராத்தி, ரவி பிஷ்னோய் சுழல் கூட்டணி அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT