Published : 09 Apr 2025 04:10 PM
Last Updated : 09 Apr 2025 04:10 PM

யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? - சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடி சதம் விளாசிய ‘இடது கை சேவாக்’

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் இடது கை தொடக்க அதிரடி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சைப் புரட்டி எடுத்து ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவிரைவு சதத்தை விளாசினார். 39 பந்துகளில் சதம் கண்டு அவர் யூசுப் பதானின் 37 பந்து சதத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இவர் தனி நபராக சிஎஸ்கேவை தோற்கடித்தார் என்றால் மிகையாகாது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன, இவரோ மறுமுனையில் தனக்கேயுரிய ஓர் உலகில் வாழ்ந்து கொண்டு அதிரடி சிக்சர்களை சிஎஸ்கேவின் நலிந்த பவுலிங்குக்கு பரிசாக வழங்கிக் கொண்டிருந்தார். நஜாஃப்கரின் நவாப் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாகை செல்லமாக அழைப்பதுண்டு, சேவாக் போலவே பிரியான்ஷ் ஆர்யாவும் டெல்லி பிளேயர்தான். டெல்லி பிரீமியர் லீகில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

ஆர்யாவின் அருமை பெருமைகளை ஏற்கெனவே ரிக்கி பாண்டிங் விதந்தோதியுள்ளார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதியற்புத பந்தில் பவுல்டு ஆகி கோல்டன் டக் அடித்தார். ஆனால், அந்த பயமெல்லாம் நேற்று அவரிடத்தில் இல்லை. கலீல் அகமத் பந்தை பளார் என்று டீப் பாயின்டுக்கு மேல் சிக்ஸ் விளாசினார். ஆனால், அதே ஓவரில் லீடிங் எட்ஜில் ஆட்டமிழந்திருப்பார். கலீல் அகமத் கொஞ்சம் தாமதமாக எதிர்வினையாற்றியதால் கேட்சைப் பிடிக்க முடியாமல் போனது. பிறகு கலீல் அகமதுவை மீண்டும் ஒரு சிக்ஸ் விளாசினார்.

இவரை ‘இடது கை சேவாக்’ என்று ஏன் அழைக்கலாம் என்றால், சேவாக் போல் பந்து வருவதற்கு முன்பாக மனத்தில் எந்த விதமான முன்னோட்டமும் எண்ண ஓட்டங்களும் இல்லாமல் பந்து வந்தவுடன், ‘பந்தைப் பார் விளாசு’ என்ற அணுகுமுறையே காரணம். முதல் விக்கெட் போன உடனேயே முகேஷ் சவுத்ரியை ஹூக் சிக்ஸ் விளாசினார். அய்யர் ஆட்டமிழந்த பிறகு மூன்று பவுண்டரிகளை தொடர்ந்து அடித்தார். பயமற்ற அடி என்பதே அவரது பேட்டிங் தத்துவமாக உள்ளது.

சேவாக் எப்படி அவுட் ஆவதைப் பற்றி கவலையில்லாமல் பீல்டர் தலைக்கு மேலேயே அடிப்பாரோ அப்படித்தான் ஆர்யாவும் ஆடுகிறார். ஒருமுறை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின், லஷ்மண், திராவிட், கங்குலி என்று அனைவரும் அஜந்தா மெண்டிஸின் புரியாத புதிர் வீச்சுக்கு இரையாக, சேவாக் மட்டும் ஒருமுனையில் போட்டு சாத்து சாத்தென்று சாத்திக் கொண்டிருந்ததை மறக்க முடியுமா? அன்று சேவாக் 221 பந்துகளில் 200 ரன்களை எடுத்து தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

குறிப்பாக, பதிரனா வீசிய தாழ்வாக இறங்கும் ஃபுல்டாஸை அடித்த சிக்ஸ் உண்மையில் பிரமிப்பூட்டக்கூடிய சிக்ஸ் என்பதில் ஐயமில்லை. கொஞ்சம் விட்டிருந்தால் அது நல்ல யார்க்கர், ஆனால் ஆர்யா மட்டையை பந்துக்கு அடியில் கொடுத்து ஒரே தூக்காகத் தூக்கினார் பேக்வர்ட் பாயின்ட்டில் சிக்ஸ். இது உண்மையில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய ஒரு சிக்ஸ்.

ஆர்யாவும் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்து 114/5 என்று ஆன போதும் கவலையில்லாமல் ‘எல்லாப் பந்துகளையும் சாத்துவதேயன்று வேறொன்றுமறியேன் பராபரமே’ என்று அடித்துக் கொண்டே இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் வீரர்கள் நேற்று 0, 9, 4, 9, 1 என்று வழிய, ஆர்யா மட்டும் மிளிர்ந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே இது டாப் கிளாஸ் இன்னிங்ஸ் என்று கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஆர்யாவின் பேட்டிங்கைப் பார்த்து வாயைப் பிளந்துள்ளார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், “முதல் பந்தில் ஆட்டமிழந்ததற்குப் பிறகே இப்படி இறங்கி ஆடுவது தைரியத்தின் மறுபெயர் ஆர்யாதான் என்று பேச வைத்துள்ளது. நாங்களும் ஸ்டம்ப் அட்டாக் செய்யாமல் வைடு ஆக வீசினோம், அவரது கேட்சை கலீல் பிடித்திருந்தால் மேட்சே மாறியிருக்கும்” என்றார்.

24 வயதேயான ஆர்யா எந்த ஒரு முதல் தர கிரிக்கெட் அனுபவமும் இல்லாமல் தன்து 4-வது ஐபிஎல் போட்டியிலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என்றால், ரிக்கி பாண்டிங் அன்று இவரை, ‘உற்சாகம் தரும் ஆச்சரியமான பேட்டர்’ என்று கூறியது எத்தனை சரியான அவதானிப்பு என்று பாண்டிங்கையும் பாராட்ட நம்மை அழைக்கிறது என்றே கூற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x