Published : 04 Apr 2025 09:13 AM
Last Updated : 04 Apr 2025 09:13 AM
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 3 ஆட்டங்களில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரு அணியிலும் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோரது பார்ம் மோசமான நிலையில் உள்ளது. ரோஹித் சர்மா இதுவரை 3 ஆட்டங்களில் 21 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் ரிஷப் பந்த் 17 ரன்களே எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் பார்முக்கு திரும்பினால் அணியின் பேட்டிங் வலுப்பெறும்.
மும்பை அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போதிலும் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்களை வீழ்த்தி முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில் 23 வயதான பஞ்சாப்பை சேர்ந்த அஸ்வனி குமாரின் பந்து வீச்சு நம்பிக்கையை அளித்துள்ளது. எனினும் ஒரே ஒரு ஆட்டத்தில் வெளிப்படுத்திய திறனை வைத்து அவரை மதிப்பீடு செய்வது என்பது நியாயமாக இருக்காது. இளம் வீரர்களுக்கு சிறந்து விளங்க ஐபிஎல் எப்போதும் ஒரு தளத்தை வழங்கியுள்ளது, ஆனால் சிலரால் மட்டுமே அதை தொடர்ந்து செய்ய முடிந்தது.
தனது அசுர வேகத்தால் அனைவரையும் திகைக்க வைத்த மயங்க் யாதவ் காயத்தில் சிக்கி மீளமுடியாமல் உள்ளார். எனினும் அஸ்வனி குமார், ஒரே ஒரு போட்டியில் மட்டும் அதிசயம் நிகழ்த்தக்கூடிய வீரர் இல்லை என மும்பை இந்தியன்ஸ் நம்புகிறது. அந்த நம்பிக்கையை அஸ்வினி குமார் காப்பாற்றுவாரா? என்பது வரும் ஆட்டங்களில் தெரியவரும். பேட்டிங்கில் ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பேட்டிங் பலமாக உள்ளது. நிகோலஸ் பூரண் 3 ஆட்டங்களில் 189 ரன்களை விளாசி நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷும் இரு அரை சதங்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். பேட்டிங்கில் பலமாக இருக்கும் லக்னோ அணி பந்து வீச்சில் பலவீனமாக உள்ளது. ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய் ஆகியோரை மட்டுமே பந்து வீச்சில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT