Published : 04 Apr 2025 08:21 AM
Last Updated : 04 Apr 2025 08:21 AM
பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு சீசனில் தனது சொந்த மைதானத்தில் முதல் ஆட்டத்திலேயே பெங்களூரு அணி தோல்வியை எதிர்கொண்டுள்ளது. முதலில் பேட் செய்த அந்த அணி 6.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை தாரை வார்த்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கை குஜராத் அணியின் முகமது சிராஜ் (4 ஓவர்கள், 19 ரன்கள், 3 விக்கெட்கள்) கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார்.
நடுவரிசை மற்றும் பின்வரிசையில் லியாம் லிவிங்ஸ்டன் (54), ஜிதேஷ் சர்மா (33), டிம் டேவிட் (32) ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதன் காரணமாகவே பெங்களூரு அணியால் 169 ரன்களை சேர்க்க முடிந்திருந்தது. பெங்களூரு அணிக்கு இது நடப்பு சீசனில் முதல் தோல்வியாக அமைந்திருந்தது. அந்த அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
போட்டி முடிவடைந்ததும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கூறும்போது, “பேட்டிங்கின் போது பவர் பிளேவில் நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடினோம். இதனால் 3 விக்கெட்களை விரைவாக இழந்தோம். பவர்பிளே முடிந்தவுடன் அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை பறிகொடுத்தோம். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எப்போதுமே போட்டியில் பவர் பிளேவை இழந்தால், சிக்கல்தான்.
இது வழக்கமான சின்னசாமி ஆடுகளம் அல்ல. இங்கு வழக்கத்தை விட பந்து சற்று வேகமாக வரும் என்று எதிர்பார்த்தோம். முதல் இன்னிங்சில் பந்து உலர்ந்து காணப்பட்டதால் சீமை கிழித்தது. இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஆட்டத்தின் முடிவுக்கான காரணம் அது அல்ல என்பதை ஒப்புக் கொள்வதும் முக்கியம். முகமது சிராஜ் நன்றாக பந்து வீசினார்.
புதிய பந்தில் அபாரமாக செயல்பட்டார். அவரது லைன்கள் மிகவும் இறுக்கமாக இருந்தன, லென்ந்த்தும் நன்றாக இருந்தன, மேலும் அவர் ஸ்டம்புகளை குறிவைத்து வீசி நிறைய அச்சுறுத்தினார். டி 20 என்பது ஒரு தாக்குதல் விளையாட்டு, ஆக்ரோஷம் விளையாட்டின் ஒரு பகுதியாகும். விளையாட்டின் எந்த வடிவத்திலும் நீங்கள் செய்யும் ஆபத்தின் மதிப்பீடு எப்போதும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே, அந்த ஆபத்து-வெகுமதி சமநிலையைப் பெறுவது எப்போதும் ஒரு பேட்ஸ்மேனின் வேலையின் ஒரு பகுதியாகும்.
குஜராத் அணியில் சுதர்சன் நன்றாக விளையாடினார். அவரது ஷாட்களின் தேர்வும், சுழற்பந்து வீச்சுக்கு எதிரான ஆட்டமும் சிறப்பாக இருந்தது. அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அடிக்க விரும்பும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அற்புதமாக விளையாடுகிறார். தொடரை அவர், சிறந்த முறையில் தொடங்கி உள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT