Published : 02 Apr 2025 08:47 AM
Last Updated : 02 Apr 2025 08:47 AM
மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது.
வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: முதல் 2 போட்டிகளில் நாங்கள் தோல்வி கண்டோம். இந்தப் போட்டியில் வாகை சூடி, வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் ஒரு குழுவாக அனைவரும் ஒத்துழைத்த விதத்தை பார்க்கும்போது இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலானது. இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை அறிமுக வீரர் அஸ்வனி குமார் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைத்தோம். நாங்கள் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது அஸ்வனி குமார் லேட் ஸ்விங் மற்றும் அற்புதமான லைன், லென்த் பந்துகளை வீசினார்.
வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் ஒரு சிறந்த இடது கை பந்துவீச்சாளராக அஸ்வனிகுமார் இருந்தார். ஆந்த்ரே ரஸ்ஸலின் விக்கெட்டை அவர் எடுத்த விதம் அலாதியானது. அதேபோல் குயிண்டன் டி காக் கொடுத்த கேட்ச்சை அவர் சிறப்பாக பிடித்து வெளியேற்றிய விதம் அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT