Published : 01 Apr 2025 10:13 AM
Last Updated : 01 Apr 2025 10:13 AM
ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிக கோப்பையைக் கைப்பற்றிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸும். இரு அணிகளுமே தலா 5 முறை கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தவை. ஆனால் இந்த சீசனின் தொடக்கம் முதல் 2 அணிகளுமே போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது. அதேநேரத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை நழுவவிட்டது. ஆர்சிபி அணியுடனான இரண்டாவது லீக் போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கைத் துரத்த முடியாமல் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது சிஎஸ்கே. நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் 183 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைப் பெற்றது சிஎஸ்கே.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வி கண்டது.
சிஎஸ்கே அணியுடனான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. இதையடுத்து ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் சிஎஸ்கே 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் வெற்றி இலக்கு முறையே 197, 183 என இருந்தது. இதனால் சேஸிங் செய்வது சிஎஸ்கே அணிக்கு கடினமான விஷயமாக மாறிவிட்டதோ என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானின் சிறப்பான பந்துவீச்சுக்கு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
முதல் 3 ஆட்டங்களில் ராகுல் திரிபாதியிடமிருந்து சிறப்பான ஒரு இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. சேம் கரணுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட விஜய் சங்கரும், எதிர்பார்த்த அளவுக்கு செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே சற்று அதிரடியாக விளையாடி 63 ரன்கள் (44 பந்துகள், 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தார். முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 7-வது வீரராக களமிறங்கி 11 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயரின் அற்புதமான கேட்ச்சால் தோனி வெளியேறினார். ஒருவேளை களத்தில் கடைசி வரை தோனி நின்றிருந்தால், சிஎஸ்கே அணிக்கு வெற்றி கைகூடியிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி இருப்பினும், கடந்த 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சுமாராக இருந்தது என்பது மட்டுமே உண்மை. எனவே, வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணியானது தனது பேட்டிங் வியூகத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று விமர்சகர்களும், ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தொடக்க ஓவர்களில் சிஎஸ்கே அணியானது தனது மந்தமான ஆட்டத்தைக் கைவிட்டு விட்டு, அதிரடியான ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்க ஓவர்களில் பந்துகளை விளாசி சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விடுகின்றனர். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக இருக்கும் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி இருவருமே அதிரடியான வீரர்கள்தான். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசும் திறமை படைத்தவர்கள்தான். ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்த்தபடி அவர்களிடமிருந்து இதுவரை அப்படியான திறன் வெளிப்படவில்லை என்பதே உண்மை. இனி வரும் லீக் ஆட்டங்களிலாவது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வியூகம் மாறினால்தான் எதிரணிகளுக்கு சவால் அளிக்க முடியும் என்பதே நிதர்சனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT