Published : 30 Mar 2025 09:02 AM
Last Updated : 30 Mar 2025 09:02 AM
விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 286 ரன்கள் வேட்டையாடிய ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்திலும் ஹைதராபாத் அணி 190 ரன்கள் குவித்திருந்தது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 209 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில், 66 ரன்கள் விளாசி வெற்றி தேடிக்கொடுத்திருந்தார். அந்த ஆட்டத்தில் விப்ராஜ் நிகாமும் 15 பந்துகளில் 39 ரன்கள் விளாசி வெற்றிக்கான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டெல்லி அணியில் களமிறங்குகிறார். அவர், முதல் ஆட்டத்தில் தனது குழந்தை பிறப்பையொட்டி களமிறங்கவில்லை. தற்போது அவர், திரும்பியிருப்பதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்த கே.எல்.ராகுலை, இந்த சீசனுக்காக டெல்லி கேபிடல்ஸ் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. எனினும் அவர், கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க இந்திய டி20 அணியில் கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லாமல் உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் அவர், கேப்டனாக இல்லாததால் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படக்கூடும். இந்த தொடரில் கவனத்தை ஈர்க்கும் வகையிலான திறனை வெளிப்படுத்தி இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதில் கே.எல்.ராகுல் கவனம் செலுத்தக்கூடும். அவரது வருகையால் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுப்பெறக்கூடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நித்திஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். போட்டி பிற்பகலில் நடைபெறும் அதிக அளவிலான ரன் வேட்டை நிகழ்த்தக்கூடும். இது ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT