Published : 28 Mar 2025 11:32 AM
Last Updated : 28 Mar 2025 11:32 AM
ஐபிஎல் டி20 லீக் மற்ற தனியார் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களை விட தரத்தில் மட்டரகமாக உள்ளது. வெறும் பேட்டிங் தான் பிரதானம், பவுலர்களை அழிக்கும் இத்தகைய தொடர்கள் மிகவும் ஒரு தலைபட்சமாகப் போய் சுவாரஸ்யத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதில் தான் முடியும். இந்நிலையில், யாரும் இதுவரை கண்டு கொள்ளாத ஒரு பகுதியான ‘ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளின்’ கேலிக்கூத்து சமாச்சாரங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் நுட்பமான கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தன் யூடியூப் சேனலில் கூறியதாவது: ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் குறைந்தது 10 பரிசுகளையாவது வழங்குகின்றனர். இரு அணிகளிலும் 50 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு பரிசளிக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், ஒரு பவுலர் நன்றாக வீசினாலோ, ஒரு நல்ல ஓவரை வீசினாலோ, அவர்களுக்கு ஒரு விருது கூட கிடைப்பதில்லை.
சூப்பர் ஸ்ட்ரைக்கர், சூப்பர் ஃபோர்ஸ், சூப்பர் சிக்ஸர்கள், இவற்றுக்கெல்லாம் பரிசுகள் இருக்கின்றன. சூப்பர் பந்து என்பதற்கான, அதை அங்கீகரிக்கும் பரிசுகள் இல்லவே இல்லை. ஒரு முறை அதிவேகமான பந்து என்று விருது கொடுத்தனர். ஆனால், அந்தப் பந்து சிக்ஸருக்குப் பறந்திருக்கும். இருந்தாலும் அந்த பவுலருக்கு அந்த விருது கிடைத்திருக்கும்” என்று கேள்வி எழுப்பினார் அஸ்வின்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பவுலர் பந்துடன் மைதானத்திலிருந்து வெளியே ஓடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. நான் பந்து வீசவில்லை என்றால் நீங்கள் எப்படி சிக்ஸர்கள் அடிக்க முடியும்?” என்று பவுலிங் என்னும் கலை ஒழிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி கிண்டலடித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 244 ரன்கள் இலக்கை சேஸ் செய்து தோற்றது அதற்கு முக்கியக் காரணமான பஞ்சாப் கிங்ஸ் பவுலர் வைஷக் விஜயகுமார் கவுரவிக்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டதை அஸ்வின் விமர்சனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“வீரர்களுக்கு குடிநீர் விநியோகித்துக் கொண்டிருந்த அந்த பவுலர்தான் வைஷக் விஜயகுமார். குஜராத் வெற்றி பெறுவதை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவரைத்தான் பந்து வீச அழைத்தார்கள். ஷெர்பானி ரூதர்போர்டும் ஜாஸ் பட்லரும் கிரீஸில் இருந்தனர். விஜயகுமார் 17 மற்றும் 19-வது ஓவரில் சிறப்பாக வீசியதால் தான் பஞ்சாப் வெல்ல முடிந்தது. விக்கெட் எடுக்கவில்லை, ஆனால் என்ன மாதிரியான டைட் பவுலிங்… இவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று மிகத் துல்லியமான ஒரு அவதானிப்பில் நல்லதொரு விமர்சனத்தை அஸ்வின் தொடுத்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT