Published : 25 Mar 2025 11:56 AM
Last Updated : 25 Mar 2025 11:56 AM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம். ‘யார்ரா அந்த பையன்?’ என போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் ரியல் டைமில் கூகுள் ஸர்ச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது.
டெல்லி அணி இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசியது. அதில் 2 ஓவர்கள் வீசிய விப்ராஜ் 1 விக்கெட் கைப்பற்றினார். அதுவும் பவர்பிளே ஓவர்களில் வீழ்த்திய விக்கெட் அது. இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி பேட் செய்த போது 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 39 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற அழுத்தம். அப்போது களத்துக்கு வந்தார் விப்ராஜ். 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். லக்னோ பந்து வீச்சை செம சாத்து சாத்தினார். 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
டெல்லி அணி விரைவு கதியில் விக்கெட்டை இழந்த போதும் பேட்டிங் ஆர்டரில் பின்வரிசையில் வரும் அஷுதோஷ் மற்றும் விப்ராஜ் பெயரை குறிப்பிட்டார் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் கெவின் பீட்டர்சன். அவர் நம்பிக்கையை அவர்கள் இருவரும் உறுதி செய்தனர்.
யார் இவர்? - உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விப்ராஜ் நிகம். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். பின்வரிசையில் காட்டடி அடிப்பார். உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் யுபி டி20 லீக் கிரிக்கெட் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கடந்த ஆண்டு நடைபெற்ற யுபி டி20 லீக் சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தர பிரதேச மாநில அணிக்காக அனைத்து பார்மெட்டிலும் 2024-25 சீசனில் விளையாடினார். கடந்த உள்ளூர் கிரிக்கெட் சீசனில் மட்டும் 3 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டி, 5 லிஸ்ட்-ஏ போட்டி மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் (2024) 7 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். இத்தனைக்கும் உத்தர பிரதேச மாநில அணியில் பேட்டராக அவருக்கு பெரிய ரோல் இல்லை. இருப்பினும் அவரது பவர் ஹிட்டிங் அந்த அணிக்கு போனஸாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் தான் ரூ.50 லட்சத்துக்கு அவரை மெகா ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அந்த அணி விளையாடிய சீசனின் முதல் போட்டியில் அறிமுக வீரராக அவர் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லி அணி வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் 29 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அவர் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரம் என்ற நம்பிக்கையை தனது ஆட்டத்திறன் மூலம் தருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளமும் அதுதான். இது போல இன்னும் பல திறமைகள் வரும் நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT