Published : 23 Mar 2025 08:30 AM
Last Updated : 23 Mar 2025 08:30 AM
ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராத், 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. இம்முறை அந்த அணி தாக்குதல் ஆட்ட பாணியை தொடரக்கூடும். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோருடன் இஷான் கிஷனும் தாக்குதல் ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக்கூடும். கடந்த சீசனில் 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இம்முறை 300 ரன்கள் குவித்து சாதனை படைப்பதில் தீவிரம் காட்டக்கூடும்.
கடந்த சீசனில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி பவர்பிளேவில் 125 ரன்களை வேட்டையாடி மிரட்டியிருந்தது. இன்றைய ஆட்டம் பிற்பகலில் நடைபெறுவதால் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் சிக்ஸர், பவுண்டரி மழையை பொழியச் செய்யக்கூடும். பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஆடம் ஸாம்பா வலுசேர்க்கக்கூடும்.
சஞ்சு சாம்சன் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடையவில்லை. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதற்கட்ட ஆட்டங்களில் ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சன் அநேகமாக இம்பாக்ட் பிளேயராக களமிறங்கக்கூடும். இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்ளக்கூடும். ஜாஸ் பட்லர் இம்முறை ராஜஸ்தான் அணியில் இல்லாததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல், ரியான் பராக், நித்திஷ் ராணா ஆகியோரை மையமாக கொண்டே பேட்டிங் வரிசை அமையக்கூடும்.
கடந்த சீசனில் 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி, ஹைதராபாத்திடம் தோல்வி கண்டிருந்தது. லீக் சுற்றில் ஒரு ரன்னில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, குவாலிபயர் 2-ல் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளுக்கு இன்றைய ஆட்டதில் பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கக்கூடும். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா, தீக்சனா, பசல்ஹக் பரூக்கி ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT