Published : 21 Mar 2025 09:17 AM
Last Updated : 21 Mar 2025 09:17 AM
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி 6 முறை 200-க்கும் அதிகமான ரன்களை குவித்து மிரட்டியது. இதில் ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக குவிக்கப்பட்ட 287 ரன்களும் அடங்கும்.
இதுதவிர அந்த சீசனில் 277 மற்றும் 266 ரன்களையும் விளாசியிருந்தது. லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்திருந்த ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றில் 2 ஆட்டங்களை கடந்து 6 வருடங்களுக்கு பின்னர் இறுதி சுற்றில் கால்பதித்திருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்ததால் அந்த அணியால் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது.
இம்முறையும் ஹைதராபாத் அணி தாக்குதல் ஆட்ட பாணியை தொடரக்கூடும். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நித்திஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் ஆகியோருடன் தற்போது இஷான் கிஷனும் இணைந்துள்ளார். இந்த நால்வர் கூட்டணி இம்முறை எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் குணமடைந்துள்ள கேப்டன் பாட்கம்மின்ஸ் நீண்ட ஓய்வில் இருந்தபடி புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறார். அவருக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, ரீஸ் டாப்லே, ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷால் படேல் செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், ஆடம் ஸாம்பா நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். ஆல்ரவுண்டராக இலங்கையின் கமிந்து மெண்டிஸும் பலம் சேர்க்கக்கூடும்.
வலுவான டாப் ஆர்டர், சிறப்பான பந்துவீச்சு இருந்த போதிலும் ஹைதராபாத் அணியின் பின்வரிசை பேட்டிங் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. உள்ளூர் வீரர்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான பேட்ஸ்மேன்கள் இல்லை. அனிகேத் சர்மா, அபினவ் மனோகர், சச்சின் பேபி ஆகியோருக்கு அனுபவம் கிடையாது. எனினும் கடந்த சீசனில் செய்த தவறுகளை இம்முறை சரிசெய்துகொள்வதில் ஹைதராபாத் அணி கவனம் செலுத்தக்கூடும்.
ஹைதராபாத் படை: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச், கிளாசன், சச்சின் பேபி, அனிகேத் வர்மா, அபிஷேக் சர்மா, அபினவ் மனோகர், கமிந்து மெண்டிஸ், வியான் முல்டர், நித்திஷ் குமார் ரெட்டி, அதர்வா டைடு, ராகுல் சாஹர், இஷான் மலிங்கா, முகமது ஷமி, ஹர்ஷால் படேல், சிமர்ஜீத் சிங், ஜெயதேவ் உனத்கட், ஆடம் ஸாம்பா, ஜீசன் அன்சாரி, கரண் சர்மா, அர்ஜூன் டெண்டுல்கர், ரீஸ் டாப்லே.
தங்கியவர்கள்: ஹென்ரிச் கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நித்திஷ் குமார் ரெட்டி (ரூ.6 கோடி).
வெளியேறிய வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT