Published : 19 Mar 2025 06:30 AM
Last Updated : 19 Mar 2025 06:30 AM
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை அதிரடி வீரரான ரிஷப் பந்த்தை மெகா ஏலத்தின் போது பெரும் தொகைக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம். இம்முறை அவரை சுற்றியே லக்னோ அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.
அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் எய்டன் மார்க் ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மத்தேயு பிரீட்ஸ்கே, டேவிட் மில்லர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஷமர் ஜோசப் மட்டுமே வெளிநாட்டு வீரர்களில் பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். இதனால் லக்னோ அணி பந்துவீச்சில் முழுமையாக இந்திய வீரர்களின் திறமையை நம்பியே களமிறங்குகிறது.
மத்தேயு பிரீட்ஸ்கே கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெற்று தொடக்க பேட்ஸ்மேனாக 150 ரன்களை விளாசியிருந்தார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக 83 ரன்களை சேர்த்திருந்தார். வலது கை பேட்ஸ்மேனான அவர், இம்முறை ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் ரிஷப் பந்த்துக்கு இந்த சீசன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறிய அவர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட களமிறக்கப்படவில்லை. இந்திய அணி அந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் ரிஷப் பந்த் வெளியேதான் அமர்ந்திருந்தார். இதனால் இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள ஐபிஎல் தொடரில் அவர், சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.
இந்த சீசனில் ரிஷப் பந்த் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மிட்செல் மார்ஷ் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். இதைத் தொடர்ந்து எய்டன் மார்க் ரம், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது பேட்டிங் வரிசை அமையக்கூடும். இதில் நிக்கோலஸ் பூரன் 2024-ம் ஆண்டில் மட்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற டி 20 தொடர்களில் 74 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் அவர் ஒரு சதம், 15 அரை சதம் என 40.89 சராசரியுடன் 2,331 ரன்கள் குவித்துள்ளார். 160 பவுண்டரி, 170 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 157.39 ஆகும்.
கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இலக்கை துரத்தும் போது பலமுறை தடுமாற்றம் அடைந்திருந்தது. இம்முறை பின்வரிசையில் டேவிட் மில்லர் இருப்பதால், அவரது தாக்குதல் ஆட்டம் பலம் சேர்க்கக்கூடும். அவருடன் ஆயுஷ் பதோனியும் நம்பிக்கை அளிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஷாபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் கூட்டணி லக்னோ ஆடுகளங்களில் முக்கிய பங்குவகிக்கக்கூடும். ஏனெனில் இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 165 மட்டுமே.
வேகப்பந்து வீச்சு துறையில் லக்னோ அணியில் இந்திய வீரர்களே முழுமையாக நிறைந்துள்ளனர். அவேஷ் கான், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், மோஷின் கான், பிரின்ஸ் யாதவ், அர்ஷின் குல்கர்னி, யுவ்ராஜ் சவுத்ரி ஆகியோரது செயல் திறனை நம்பியே லக்னோ களமிறங்குகிறது. இதில் கடந்த சீசனில் அதிவேகத்தில் பந்து வீசி மிரளச் செய்த மயங்க் யாதவ், மோஷின் கான் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. எனினும் சர்வதேச அரங்கில் விளையாடிய அனுபவம் கொண்ட அவேஷ் கான், ஆகாஷ் தீப் பலம் சேர்க்கக்கூடும். இளம் வீரர்களில் பிரின்ஸ் யாதவ், அர்ஷின் குல்கர்னி, யுவ்ராஜ் சவுத்ரி ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
லக்னோ படை:
ரிஷப் பந்த் (கேப்டன்)
அப்துல் சமத்
ஆயுஷ் பதோனி
மத்தேயு பிரீட்ஸ்கே
ஆர்யன் ஜூயல்
டேவிட் மில்லர்
நிக்கோலஸ் பூரன்
யுவ்ராஜ் சவுத்ரி
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
அர்ஷின் குல்கர்னி
எய்டன் மார்க்ரம்
மிட்செல் மார்ஷ்
ஷாபாஷ் அகமது
ஆகாஷ் தீப்
ஆகாஷ் சிங்
அவேஷ் கான்
ஷமர் ஜோசப்
மோஷின் கான்
பிரின்ஸ் யாதவ்
திக்வேஷ் ராதி
ரவி பிஷ்னோய்
மணிமாறன் சித்தார்த்
மயங்க் யாதவ்
தங்கியவர்கள்: நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோஷின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி
(ரூ.4 கோடி)
வெளியேறிய வீரர்கள்: கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாயினிஸ், குயிண்டன் டி காக், கிருணல் பாண்டியா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT