Published : 12 Mar 2025 12:12 AM
Last Updated : 12 Mar 2025 12:12 AM
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என மறுத்துள்ளார் கே.எல்.ராகுல். இதனால் அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை கேப்டனை அறிவிக்காமல் உள்ளது. அநேகமாக கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடன் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் பெயரும் கேப்டன் பதவிக்கு அடிபட்டது.
இதை கருத்தில் கொண்டே வீரர்கள் மெகா ஏலத்தின் போது கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி கே.எல்.ராகுலை அணுகியபோது அதற்கு அவர், மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், வீரராகவே அணியில் தொடரவே விரும்புவதாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டனாக கே.எல்.ராகுல் சில கசப்பான அனுபவங்களை பெற்றார். மேலும் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பை எதிர்நோக்கி உள்ளதால் ஐபிஎல் தொடரின் முதற்கட்ட ஆட்டங்களில் கே.எல்.ராகுல் விளையாடுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை மனதில் வைத்தே அவர், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT