Published : 07 Mar 2025 08:41 AM
Last Updated : 07 Mar 2025 08:41 AM

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துக்கே ஆதரவு: டேவிட் மில்லர்

லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தென் ஆப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. 363 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியால் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் தனி வீரராக போராடி 67 பந்துகளில் சதம் விளாசிய போதிலும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் இந்தத் தொடரில் தங்கள் அணி ஓய்வு இல்லாமல் துபாய்க்கும் அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் பயணம் செய்த நல்லது அல்ல என டேவிட் மில்லர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களையும் பாகிஸ்தானில் விளையாடியது. அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்த போதிலும், ‘ஏ‘ பிரிவில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தின் முடிவு தெரிந்த பின்னரே அரை இறுதியில் யார், யாருடன் மோதுவார்கள் என்பது முடிவாகும் என்ற சூழ்நிலை இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் செவ்வாய் கிழமை அரை இறுதி சுற்று தொடங்கும் வகையில் அட்டவணை இருந்ததால் ‘பி’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்திருந்த தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே துபாய்க்கு பயணம் செய்தன. ஏனெனில் இதில் ஒரு அணியே அரை இறுதியில் இந்தியாவை துபாயில் எதிர்கொள்ள வேண்டும். இந்திய அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்ததால் தென் ஆப்பிரிக்க அணி அங்கு சென்ற வேகத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு திரும்பியது.

அதாவது கராச்சியில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி அதிகாலையில் புறப்பட்டு துபாய் சென்றது. இதன் பின்னர் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ததால் உடனடியாக 2-வது அரை இறுதி ஆட்டம் நடைபெறும் பாகிஸ்தானுக்கு மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி புறப்பட்டு வந்தது. இதுபோன்ற போட்டி அட்டவணை விரக்தியை ஏற்படுத்தியதாக டேவிட் மில்லர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஒரு மணி நேரம் 40 நிமிட விமான பயணம் மட்டுமே. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டியது இருந்தது. நாங்கள் கடைசி லீக் ஆட்டத்தை இரவில் முடித்துக் கொண்டு அதிகாலையில் துபாய்கு பறந்தோம். 4 மணிக்கு துபாயை அடைந்தோம். பின்னர் மறுநாள் காலை 7.30 மணிக்கு மீண்டும் பாகிஸ்தானுக்கு புறப்பட்டு வந்தோம். 5 மணி நேர பயணத்தால் நாங்கள் புத்துணர்ச்சி பெற நேரம் இல்லை. இது உகந்த சூழ்நிலை அல்ல.

இறுதிப் போட்டியில் விளையாடும் இந்தியா, நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளுமே சிறந்தவை. தாங்கள் சிறந்த அணி என்பதை இந்தியா, உலகிற்கு காட்டியுள்ளது. பல வருடங்களாக அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். இறுதிப் போட்டி சிறந்ததாக இருக்கும்.

நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறந்த அடித்தளம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக ஆட்டத்தின் நடுப்பகுதியில் 2 விக்கெட்களை கூடுதலாக இழந்தோம். ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்ய முயற்சித்தார்கள். இந்தியாவுக்கு எதிராக மீண்டும் போட்டியில் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் வாழ்க்கை சில நேரங்களில் நியாயமாக இருப்பதில்லை. கோப்பையை வெல்ல வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையாக கூறவேண்டுமெனில் இறுதிப் போட்டியில் நான் நியூஸிலாந்து அணிக்கே ஆதரவு கொடுப்பேன்.

இவ்வாறு டேவிட் மில்லர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x