Published : 07 Mar 2025 07:59 AM
Last Updated : 07 Mar 2025 07:59 AM

ஒருநாள் கிரிக்கெட்டில் முஷ்ஃபிகுர் ரகிம் ஓய்வு

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்ஃபிகுர் ரகிம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரகிம், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய வங்கதேச அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் சமூகவலைளத்தில் முஷ்ஃபிகுர் ரகிம் ஓய்வை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முகநூலில் அவர், வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எல்லாவற்றுக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அளவில் எங்களது சாதனைகள் குறைவாகவே இருந்திருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும்போதெல்லாம் 100 சதவீதத்துக்கும் அதிகமான அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் செயல்பட்டேன்.

கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலாக இருந்தன. இது என் விதி என்பதை உணர்ந்து கொண்டேன். கடந்த 19 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாட உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முஷ்ஃபிகுர் ரகிம் கடந்த 2005-ம் ஆண்டு வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டியில் முறிமுகமானார். அடுத்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிங்கினார். 274 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 36.42 சராசரியுடன் 7,795 ரன்கள் குவித்துள்ளார். 9 சதங்கள், 49 அரை சதங்கள் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முஸ்ஃபிகுர் ரகிம் இந்தியாவுக்கு எதிராக டக் அவுட் ஆன நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

முஷ்ஃபிகுர் ரகிம் வங்கதேச அணிக்காக 94 டெஸ்ட் போட்டி, 102 டி 20 ஆட்டங்களிலும் விளையாடி உள்ளார். டி 20 போட்டிகளில் இருந்தும் ஏற்கெனவே அவர், ஓய்வு பெற்றுவிட்டார். தற்போதைய நிலையில் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும் மனநிலையில் முஷ்ஃபிகுர் ரகிம் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x