Published : 06 Mar 2025 10:06 PM
Last Updated : 06 Mar 2025 10:06 PM
மும்பை: தோனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இறுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் அனில் கும்ப்ளே, ஷேன் வாட்சன், அஜய் ஜடேஜா, ஆகாஷ் சோப்ரா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னால், தோனி என்னிடம் வந்து, ‘இந்த வருடம் நான் கேப்டன் பொறுப்பு வகிக்கவில்லை. இனி நீ தான் கேப்டன்’ என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘முதல் போட்டியிலிருந்தா? நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா?’ என்று நான் அவரிடம் கேட்டேன்.
போட்டிக்கு சில நாட்களே இருந்த நிலையில் அது எனக்கு உண்மை என தோன்றவில்லை. ஆனால் அவர் எனக்கு உறுதியளித்தார். ‘இது இனி உன் அணி. நீ உன் முடிவுகளை எடு. நான் தலையிட மாட்டேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஆலோசனை தருவேன். அதையும் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை’ என்று கூறினார். தோனி என் மீது வைத்த அந்த நம்பிக்கை எனக்கு மிகவும் முக்கியமானது” இவ்வாறு ருதுராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT