Published : 04 Mar 2025 11:58 AM
Last Updated : 04 Mar 2025 11:58 AM

அரை இறுதியில் டிராவிஸ் ஹெட்டை சமாளிக்குமா இந்தியா? - சாம்பியன்ஸ் டிராபி

துபாய்: துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக அவரது கடந்த கால செயல்பாடு அப்படியானதாக அமைந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அதன் நாக்-அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும். முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இதில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 43.12. கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் சதம் விளாசி இருந்தார். இது தவிர ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் இந்தியாவுக்கு எதிராக சதம் பதிவு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரிலும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ஹெட் வெளிப்படுத்தி இருந்தார்.

அஸ்வின் அட்வைஸ்: “டிராவிஸ் ஹெட்டை சமாளிக்க கேப்டன் ரோஹித் சர்மா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது புதிய பந்தில் பந்து வீச வருண் சக்கரவர்த்தியை அனுமதிக்க வேண்டும். ஹெட் அடித்து ஆட விரும்புவர். வருணுக்கு எதிராகவும் அதை செய்ய முயல்வார். அதன் மூலம் இந்தியா அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியும். இந்திய அணி அரை இறுதியில் டாஸ் வென்றால் நிச்சயம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும். ஹெட் விக்கெட்டை விரைந்து வீழ்த்தினால் ஆட்டம் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகம் வலது கை பேட்ஸ்மேன்கள் உள்ளார். அவர்களுக்கு எதிராக நமது இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அக்சர் சிறந்து விளங்குவர். இந்திய அணி முதலில் பேட் செய்தாலும் சிறந்த இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கும் என நம்புகிறேன்.” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x