Published : 03 Mar 2025 12:09 PM
Last Updated : 03 Mar 2025 12:09 PM

இந்தியாவிடம் ‘வெற்றிகரமான தோல்வி’ கண்ட நியூஸிலாந்து - ஆஸி.யை ‘தவிர்த்த’ கதை இது!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து போட்டி அரையிறுதி வாய்ப்புக்கான போட்டி என்றால் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். மாறாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதை தவிர்ப்பது எப்படி என்று இரு அணிகளும் பெரிய அளவில் போட்டாப் போட்டியுடன் ஆடியது போலவே இருந்தது.

அதாவது, வெற்றி பெறுவது குறித்து இரு அணிகளுக்கும் பெரிய ஆர்வமில்லை. கடைசியில் இந்த ஆர்வத்தில் நியூஸிலாந்து அணி ‘வென்றது’. எப்படி எனில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்காமல் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது நியூசிலாந்து. வெற்றி பெற ஆர்வமில்லாவிட்டாலும் வருண் சக்ரவர்த்தி போன்ற ஓர் அற்புதமான பவுலரை வைத்துக் கொண்டு வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்திய அணி, ஆஸ்திரேலியாவைச் சந்தித்தாலும் பரவாயில்லை என்று வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து டாஸ் வென்று இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. ஷுப்மன் கில் உள்ளே வந்த பந்தை தப்பும் தவறுமாக ஆடி எல்.பி. ஆகி தன்னுடன் ரிவியூவை ஒன்றையும் காலி செய்து விட்டுப் போனார. தடுப்பாட்ட உத்தியில் கவனம் இல்லை. ஸ்கொயர் லெக்கில் ஆள் நிறுத்தப்பட்டிருந்தும் ரோஹித் சர்மா புல் ஷாட்டை தரையில் ஆட முற்படாமல் காற்றில் ஆடி கேட்ச் ஆனார்.

விராட் கோலி ஆட்டமிழந்த கிளென் பிலிப்ஸின் பாயிண்ட் கேட்ச் உண்மையில் கோலியை நிற்க விடக் கூடாது என்பதில் பூண்ட உறுதி போலவே தெரிந்தது. அட்டகாசமான கேட்ச். 30/3 என்ற நிலையில் உண்மையில் வெற்றி பெற ஆடும் அணி என்ன செய்யும்?

அடுத்தடுத்து வரும் பிளேயர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நியூஸிலாந்துக்கும் பெரிய அளவில் வெற்றி பெற ஆர்வமில்லாததால் ஸ்ரேயஸ் அய்யரும் அக்சர் படேலும் பழம் பஞ்சாங்க ஒரு நாள் இன்னிங்சை ஆடினர். நியூஸிலாந்தும் நெருக்கடி கொடுக்கவில்லை, அவர்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலும் தெரிந்து கொண்டாலும் இருவரும் 51 பந்துகள் பவுண்டரி அடிக்காமலேயே ஆடினர்.

இதை எப்படி புரிந்து கொள்வது? இங்கு பிட்ச் பற்றி ரசிக அறிவு ஜீவிகள் என்னதான் ‘ஞான’த்துடன் பேசினாலும் பிட்ச்சில் 51 பந்துகள் பவுண்டரி அடிக்க முடியாத அளவுக்கு பூதமா கிளம்பியது?

அக்சர் படேல் நெருக்கடி கொடுத்திருந்தால் எப்படி ஆடுவார் என்பது நாம் இதற்கு முன் பார்த்ததே, ஆனால் இந்த மந்த இன்னிங்ஸை ‘முதிர்ச்சி’ இன்னிங்ஸ் என்று ஊடகங்களும் ‘நிபுணர்களும்’ கருத இடமுண்டு. 42 ரன்களில் அக்சர் படேல் ஆடிய ஷாட்டை நாம் எப்படி மதிப்பிடுவது என்று புரியவில்லை, டாப் எட்ஜ் ஆகி வில்லியம்சன் கேட்ச் எடுத்தார். ஸ்ரேயஸ் அய்யர் 79 ரன்களில் ரூர்க்கின் ஷார்ட் பிட்ச் பவுன்சருக்கு இரையானார்.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் ஆடியும் கடைசி 10 ஓவர்களில் 64 ரன்களை 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி எடுத்த 249 ரன்கள் நிச்சயம் போதாது, விரட்டப்படக்கூடியதே. இதுவும் இந்திய அணிக்குத் தெரியும். இது 280-85 பிட்ச். இதில் 249 ரன்கள் என்னும்போதே, மிடில் ஓவர்களில் 10 ஓவர்களில் 37/3-க்குப் பிறகு 11 முதல் 40 வது ஓவர் வரை 29 ஓவர்களில் 148 ரன்களையே இந்திய அணி எடுத்தது என்பதே இந்திய அணியும் வெற்றி பெற முழுமுச்சூடன் ஆடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

அனைத்திற்கும் மேலாக நியூஸிலாந்து அணி இலக்கை விரட்டிய விதம் என்ன இருவருமே வெற்றி பெறும் ஆர்வமில்லாமல் ஆடுகிறார்களா என்ற ஐயத்தையே எழுப்பியது, ஏனெனில், ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் சந்திப்பது பற்றிய அச்சம் இரு அணிகளுக்குமே இருந்துள்ளது. ஏனெனில் நியூஸிலாந்து அணி தன் கடைசி 6 விக்கெட்டுகளை 54 ரன்களுக்கு இழந்து வெற்றிக்கான எந்த வித முன்னோக்கிய உந்துதலும் இல்லாமல் 205 ரன்களுக்கு 45.3 ஓவர்களில் அவசரம் அவசரமாக ஆட்டமிழக்க வேண்டிய நிர்பந்தம் என்ன?

முதல் 10 ஓவர்களில் இந்தியாவை விட கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் 44/1 என்று இருந்த நியூஸிலாந்து 11-வது ஓவர் முதல் 34-வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் எந்த வித முயற்சியும் எடுக்காமல் 96 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பிறகு மடமடவென விக்கெட்டுகளை விட்டது.

வருண் சக்ரவர்த்தியை அவர்களால் ஆட முடியாது என்பது புரிகிறது. ஆனால் அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ்வை அடிக்க முடியாமல் திணறியது இந்தியாவில் அந்து 3-0 என்று வெற்றி பெற்றதற்கான சுவடுகளைக் கொண்டதாகத் தெரியவில்லை.

அதாவது, 30 ஓவர்களில் இந்திய அணியின் இலக்கில் பாதியை எடுத்து விட்டிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் நியூஸிலாந்து தோற்றுப் போயிருப்பது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திப்பது தன் இறுதி வாய்ப்பை அதிகரிக்கும் என்ற (தவறான) கணக்கீடாக இருந்திருக்கலாம்.

இந்திய அணியும் நியூஸிலாந்தை வீழ்த்தியே ஆக வேண்டுமென்று ஆடவில்லை என்பது கண்கூடு என்றாலும் முடிவு நோக்கி நாம் தள்ள வேண்டாம், விஷயங்கள் அதுவாக நடந்தால் நல்லது என்பது போல் ஆடியது. ஆனால் நியூஸிலாந்து மடிந்து இந்திய அணியை ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் சந்திக்க வைத்து விட்டது.

ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை சமீப காலங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதியில் தோற்கடித்தது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் இந்திய அணி தகுதி பெற முடியாமல் போனதை நியூசிலாந்து செய்தாலும், ஆஸ்திரேலியாதான் டெஸ்ட்டில் 3-1 என்று தொடரை வென்று சீல் வைத்தது.

இப்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது, இந்த முறை ரோஹித் சர்மா தன் சோம்பேறித்தனமான கற்பனைவளமற்ற கேப்டன்சியைத் தள்ளி வைத்து விட்டு ஸ்ட்ராடஜி போட்டு ஆஸ்திரேலியாவைக் காலி செய்ய வேண்டும் இல்லையெனில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கப் பயந்துதான் இந்த நியூஸிலாந்து போட்டியை கூடிய மட்டும் ஆர்வமில்லாமல் ஆடியது என்பது சரியாகிப் போய்விடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x