Published : 27 Feb 2025 11:40 PM
Last Updated : 27 Feb 2025 11:40 PM

டி-ஷர்ட்டில் மோர்ஸ் குறியீடு: ஓய்வு குறித்து தோனி சூசகம்

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்கும் 10 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இதில் தோனியும் பங்கேற்றுள்ளார்.

இதற்காக புதன்கிழமை அன்று அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற டி-ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த மோர்ஸ் குறியீடு கவனம் பெற்றுள்ளது. ‘One Last Time’ என்பதை அதை டீ-கோட் செய்ததன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

இது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது. தோனி தனது ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வை தான் இப்படி சூசகமாக குறியீடு மூலம் வெளிப்படுத்தி உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 264 போட்டிகளில் 43 வயதாகும் தோனி விளையாடி உள்ளார். அதன் மூலம் 5,243 ரன்களை சேர்த்துள்ளார். ஐந்து முறை அவரது தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23-ம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த சீசனுக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் 10 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை தொடங்கி உள்ளனர். இந்த பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர்மட்ட செயல் திறன் மையத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி உள்ளது. இதில் தோனியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆந்த்ரே சித்தார்த், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ், வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, கமலேஷ் நாகர்கோட்டி, முகேஷ் சவுத்ரி, அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x