Published : 27 Feb 2025 10:40 PM
Last Updated : 27 Feb 2025 10:40 PM
ராவல்பிண்டி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாமல் வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025’ தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘குரூப் - ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறி உள்ளது.
கடந்த 19-ம் தேதி நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் 60 ரன்களில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். தொடர்ந்து கடந்த 23-ம் தேதி இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.
இந்த நிலையில் வங்கதேச அணியுடன் இன்று (பிப்.27) ராவல்பிண்டியில் திட்டமிடப்பட்ட போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பது. ஆனால், அதை மழை வீணடித்தது. அடுத்ததாக அந்த அணி நியூஸிலாந்து உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப்-ஏ பிரிவில் நெட் ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது பாகிஸ்தான். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த தோல்வி உள்நாட்டு அணி ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT