Published : 22 Feb 2025 07:25 AM
Last Updated : 22 Feb 2025 07:25 AM

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பார்மில் இல்லை. இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என இழந்தது. அதேவேளையில் இரு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் 0-2 என படுதோல்வி கண்டிருந்தது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணி எந்தவிதமான ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லவில்லை.

கடைசியாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி இருந்தன. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து 3-2 என கைப்பற்றியிருந்தது. இதுஒருபுறம் இருக்க உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக முன்னணி வீரர்கள் 5 பேர் விளையாடாவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

முக்கியமாக பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விலகி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சு துறையும் பலவீனமாகி உள்ளது. மேலும் ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டாயினிஸ் கடைசி நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்தது, மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியது அணியின் சமநிலையை பாதித்துள்ளது.

கேப்டன் ஸ்மித் 3-வது வீரராக மீண்டும் களமிறங்கக்கூடும். டிராவிஸ் ஹெட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. லாகூர் மைதானத்தில் அவர், கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் 101 மற்றும் 89 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு 154 ரன்கள் விளாசி டிராவி ஹெட் மிரட்டியிருந்தார். இதனால் அவர், மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் அவருக்கு ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோர் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர், பில் சால்ட், ஜெமி ஸ்மித் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

அணிகள் விவரம்

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்கர்க், மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ், பென் ட்வார்ஷுயிஸ், நேதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா. ஸ்பென்சர் ஜான்சன், சீன் அபாட்.

இங்கிலாந்து: ஜாஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x