Published : 22 Feb 2025 03:18 AM
Last Updated : 22 Feb 2025 03:18 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா - குஜராத் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் குவித்தது. முகமது அசாருதீன் 177, கேப்டன் சச்சின் பேபி 69, சல்மான் நிஷார் 52 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய குஜராத் அணி 4-வது நாள் ஆட்டத்தில் 154 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் சேர்த்தது. ஜெய்மீத் பட்டேல் 74, சித்தார்த் தேசாய் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கைவசம் 3 விக்கெட்கள் இருக்க முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு மேற்கொண்டு 29 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 174.4 ஓவர்களில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்மீத் பட்டேல் 79, சித்தார்த் தேசாய் 30, அர்ஸன் நக்வாஸ்வாலா 10 ரன்களில் அவுட்டானார்கள். இந்த 3 விக்கெட்களையும் நெருக்கடியான சூழ்நிலையில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வதே வீழ்த்தினார்.

இதனால் கேரளா அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை விளையாடிய கேரள அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதம் தெரிவித்தன. முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலை பெற்றதன் மூலம் கேரளா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் கேரளா அணி அறிமுகமான 68 வருடங்களில் இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.

1957-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகமான கேரளா அணி கடைசியாக 2018-193-ம் ஆண்டு சீசனில் அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது. இம்முறை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 26-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. விதர்பா அணி அரை இறுதி ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தியது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 406 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 97.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 66, ஷம்ஸ் முலானி 46 ரன்கள் சேர்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x